சொல்

சொற்கள் விழுந்து சொரிந்தன திசையெங்கும்.
சொற்கள்…
எண்ணுக் கணக்கற்ற
விதவிதமாய்ச்
சொற்கள்…பெருகிச்
சொரிந்தன திசையெட்டும்.
சொற்கள்…
எண்ணுக் கணக்கற்ற சொல்வகைகள்…
இற்றைவரை கோடிகோடி
வாய்கள் சொரிந்து கொட்ட
காற்றில் மிதக்கும்.
கடலில் கலந்திருக்கும்.
சேற்றில் சிதம்பும்.
தீயிலும் குளித்திருக்கும்.
அத்தனை சொற்களும்,
அவற்றின் ஒலித்துணுக்கும்,
சுத்திடுமா எம்மை?
தொலைந்து அழிந்தனவா?
எத்தனைதான் வேதமென
இன்றும் ஒலிப்பவை சொல்?
மந்திர அதிர்வோடு வாழுபவை எத்தனைதான்?
தந்திரங்கள் செய்தடங்கித்
தாழ்ந்தவைகள் எத்தனையோ?
இத்தனை சொற்களும்
என்னமாற்றம் செய்ததெங்கும்?
தைத்துச் செவியைத் தகர்த்து
உளம்புகுந்து
இதயத்தைத் திருத்தியவை எத்தனை?
அதேபோல
இதயத்தைச் சிதைத்தவை எத்தனை?
உலகுக்கு
இதந்தந்த தெத்தனை சொற்கள்?
மற்றவரை
அவமானப் படுத்தி அடக்கியவை எச்சொற்கள்?
அவலங்கள் தந்து
அழித்ததெத்தனை சொற்கள்?
சவமாக்கக் கட்டளையைத்
தந்ததெந்தச் சொற்கள்?
கவிதையாய் மாறியவை எச்சொற்கள்?
கேட்கவே
எவரும் விரும்பாது
இழிந்ததெவ் வகைச் சொற்கள்?
எவரையும் எழுச்சிகொள்ளத்
தூண்டிய தெவர் சொற்கள்?
நியாயம் பகர்ந்தவைகள் எந்தெந்தச் சொற்கள்?
ஊர்க்கு
ஞானம் வழங்கியவை
யாரெவரின் வாய்ச்சொற்கள்?
எத்தனை கோடிகோடி சொற்கள் பிறந்துளன?
எத்தனை கோடிகோடி சொற்கள்
இன்றும் வரவுளன?
இன்றுவரை தோன்றிய சொற்களைக்
கணக்கெடுத்தல்
இன்றுவரை ஊறிவந்த சொற்களை
இனங்காணல்
என்னென்று சாத்தியம்?
சொற்களைப் ‘பெறும்’ வாயும்
வாய்களுக்கு ஏற்ப சொற்களின் மதிப்பும்தான்
மாறும்!
உன்சொல்… வாழ்விக்குமோ?
இல்லை
சாகவைக்குமோ? என்பதில் நின்
தரம், தகுதி புவிகாணும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.