கோடையும் மாரியும்

நீண்ட நெடுங்கோடை
நெருப்பாய்த் தகித்தெரிய,
காய்ந்து புல் பூண்டும்
கருகிவிட,
இலையுதிர்த்து
வேம்பு விருட்சங்கள் கிளை
எலும்புக ளோடிருக்க,
காற்று ஆவியாய் மறைய,
கருவாடாய் வளிகிடக்க,
ஊற்றும் அடைக்க,
ஊர்க்கிணறுகளும் வற்ற,
மண் ஈரம் காய்ந்து மலடாக,
வாய்க்கால்கள்
தண்ணீரும் இன்றித்
‘ததிங்கிணதோம்’ போட்டிருக்க,
“மாரி வருமிந்த மாதம்” என
வழமைபோல்
ஏரெடுத் துழுது எதிர்பார்த்து
விதைத்துவிட்டு
காத்திருப்போர் கனவு கானலாக,
காய்த்துதிர்த்து
எண்ணுக் கணக்கற்று
எண்திக்கும் சென்று சேர்ந்து
மண்ணுள் புதைந்து
‘தகாதகாலம்’ கழிக்க
வசதியற்ற விதைகள் மாய்ந்து
கருகிவிட,
பசிக்குப் புல் பூண்டற்று
பசு, மாடு, கன்று, ஆடு
எங்கோ தொலைய,
இருந்த பறவை பட்சி
எங்கோ அகல,
தெருவில் இறங்கினாலே
பங்கப் படுத்தி அனல் பழிதீர்க்க,
தார்உருகிக்
கால்வைக்க முடியாது கதறவிட,
வெக்கையால் ‘கண்
நோயும்’ பரவ,
நொடிக்குநொடி உயிர் வதங்க,
தேடி…
‘வரட்சி நிவாரணத்தின்’ பின் ஓடி…
“ஏனின்னும் மாரி இறங்கி
வெழுக்கவில்லை?”
“கும்ப பூசையோடு கொட்டுமே
இல்லாட்டில்
கும்பச் சரிவோடு கூடிடுமே என்னாச்சு?”
“நாசமாய்ப் பொயிடுமோ நம்வயல்கள் குளங்கள்” என
வான் பார்த்திருக்கின்றோம்!
வாரா திருந்திவிட்டு…
சோனா வரியாய்ச் சொரிந்து,
ஈரஞ் சுவறவைத்து,
ஓரிரண்டு நாட்களில்
ஊரில் வெள்ளக் காடு நட்டு,
மூழ்கடித்து மூச்சு முட்ட வைத்து,
வயல் அழித்து,
ஏற்கனவே நொந்து
எதும் மீட்சி கிட்டாது
சோற்றுக்குச் சிங்கி அடித்துக் கிடக்குமெமை
கூற்றுக்கு இரையாய்க் கொடுத்து,
ஒரேஆண்டில்
“வெள்ள நிவாரணமும் வேண்டவைப்பேன்”
எனக்காலம்
சொல்லிச் சவால்விடுதோ?
நம் சோதனைக்கு முடிவிலையோ?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.