எவர் எங்களை மீட்கிறது?

வேதனை நீங்கிடும் வேளையைத் தேடியே
வெந்து தவமிருப்போம் -எங்கள்
மேனியின் காயங்கள் ஆறிட நேர்ந்துமே
மேலும் விழித்திருப்போம் -தொடர்
சோதனை தாங்கிட, ஆன்ம பலம் பெற,
சோராது நோன்பிருப்போம் – எங்கள்
தோல்விகள் மாற்றவும் சோகங்கள் சாய்க்கவும்
தோளில் பலம் பெறுவோம்!

என்ன வகைப்பழி செய்து தொலைத்தமோ
இன்றுமெம் நிம்மதியும் -நில்லாது
எம்மைவிட்டே அகலும்; குழப்பம் பல
எங்களைச் சூழ்ந்து வரும். -அட
புன்னகை கூடத் தவணை முறையிற்தான்
பூக்கும்; அழுகை மிகும்.-என்று
புத்துயிர் கொள்ளும் எம் பூர்விகம்?
யாரினைப்
போற்றி… உயிர் பிழைக்கும்?

நல்லவர் வல்லவர் சென்று தொலைகிறார்
நாடு தனிக்கிறது -நீதி,
ஞாயங்கள் தேடுறார் ‘நீதியின் காவலர்’…
நாடே தலைகவிழ்ந்து…நிதம்
“இல்லை இனி இங்கு வாழ வழி” என்று
ஏங்கிச் சலிக்கிறது- துயர்
ஏவிடும் பேய்களை ஓட்டிக் கலைத்தெவர்
எங்களை மீட்கிறது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.