ஈடு இணை?

சின்னக் குளிர்தூவிச் சிலிர்க்கவைக்கும் பொன்மாலை!
தென்றல் தவழும் திசையெங்கும்
பக்திமயம்!
‘அன்னைமார்’ மூவருக்கு
அடுத்து மும் மூன்றுதின
நவராத்ரி பூசை!
நாத மணிச்சந்தம்,
தவிலோடு குழலினது சஞ்சாரம்,
மந்திரங்கள்,
செவிகளிலே தேனூற்றும்
‘சகலகலாவல்லி மாலை’,
இவற்றோடு தேவாரம்,
இனிய சங்கு சேமக்கலம்,
குவிந்திருக்கும் பூக்களினால் வீதியெங்கும் கொள்ளைவாசம்,
கவிகின்ற சாம்பிராணித் தூபம்,
கற்பூர தீபம்,
தவக்கோலம் கூட்டுகிற
வீபூதி சந்தனம், ஆ…
அவலோடு சுண்டல்,
அரும்பொங்கல், புளிச்சாதம்,
உண்டு;
பிரசாத உருசிதெளிந்து;
அருள் கொண்டு;
உண்மைப் பரவசத்தை உணர்ந்து;
தேவி எழில்
கண்ணாரக் கண்டு;
காதினிக்கக் கேட்டு;
காலாற வீதிசுற்றிக் கனிந்து;
திரும்புகையில்…
வீரமும், செல்வமும்,
மெய்யுணரும் ஞானமும், கை
கூடிவரும்!
எங்களது திருக்கோவிற் சூழல்களில்
சேருமிம் மகிழ்வுக்கெத் திரவியங்கள் ஈடாகும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.