கைகள் கோரும்

வருமானம் குறைந்து தேயும் நொந்து -விலை
வாசி பாயும் மும்மடங்கு என்று
அரைகுறையாய்க் குடித்துண்டு கொண்டு -வாழ்வோம்
அதை ‘நிறைக்க’ திராணியற்று இன்று!

எப்பொருளும் விலை அதிகமாக -தேவை
இருக்கின்ற பல இலாது போக
இப்பொழுதே பதுக்கல் முடி சூட -வாழ்க்கை
இரதத்தை இழுத்தோட்டுவதார் மீள?

கடைகளிலே பொருள் நிறைந்து தேங்கும் -வாங்க
காசிலாத பணப்பைகளோ ஏங்கும்
கிடைக்கின்ற சலுகைகளும் நீங்கும் -இந்தக்
கேட்டைப் பசி வயிறுகளா தாங்கும்?

நடுத்தர வர்க்கக் குடும்ப வாழ்வு – இன்று
நம்பிக்கை இழந்து வாடலாச்சு
அடுத்த வேளைக்கில்லை வீட்டில் சோறு -இன்று
அன்றாடங் காச்சி பிழைப்போ சூது.

சாமான்கள் விலையுயரும் நாளும் -ஆனால்
சம்பளமோ உயரவில்லை காணும்
“ஏன்” “கூட்டும்” கேட்கலை யார், எங்கும் -ஏனோ
நிஷ்டை கூடி இன்று தொழிற் சங்கம்.

சம்பளமோ போதவில்லை இன்று -கடன்
சந்தோசங்களை வதைக்கும் கொன்று
நம் சேமிப்பும் கரையும் சென்று -என்ன
நாளை ஆகும்…கவலை யார்க்கு உண்டு?

சமாளிப்பார் சனங்கள் என்று கொண்டே -”இடர்
தணிக்க வழி காண்பர் அவர்” என்றே
சுமை வரியை அதிகரிப்பார் இன்றே -தேசம்
துளிர்க்கும்; பசி வயிறு அழும் வெந்தே!

கவிதையிலே பாடி என்ன இலாபம்? -யார்தான்
கடனடைப்பார்? பிணி தடுப்பார் கூறும்?
அவலங்களை அகற்ற கைகள் கோரும் -ஏதும்
அருளிடாது இலாபமின்றிப் ‘பாரும்’!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.