சுடர்

எல்லாம் எரிந்து இறுதிச் சாம்பல் எஞ்ச…
கொஞ்சம் அதைக்காற்றுக் கொண்டுபோக…
மழைகரைத்து
மிஞ்சியதில் பாதியினை
விரைந்து வெள்ளம் அகற்ற…
எரிந்த அடையாளம் ஏதுமற்று;
நிறம், மீந்த
கரித்துண்டும் காணக் கிடைக்காது;
காலந்தான்
உருமாற்ற வாசம், உரு அழிந்து;
மண் கிடக்க…
இடைக்கிடை புகைந்து,
“இன்று அதேஇடத்தின்
அடியில்…. தணல், பொறி
இருக்கோ இல்லையோ” என்று
கூட அறிய முடியாக் குழப்பமுற்று…
சூழலும் மாற;
புதிது புதிதாக
ஏதேதோ தோன்றி
எதார்த்தம் தடுமாற;
அன்றாடத் தோடு அனுதினமும்
போராடி
தின்று குடிக்க வழியின்றித்
திரிகையிலும்
எண்ணத்தில், மனதில்,
இதயத்தின் ஒருமூலை
தன்னில், கிடக்கும்
அன்றணையாத் தணல், ஓர்
அக்கினிக் குஞ்சினது விம்பம்,
இம் மழைநாளில்
மூழும், முளாசும்,
முகத்தில் ஒளியூட்டும்,
ஊரார் அறிவாரோ இல்லையோ…
அது சுடரும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.