தடங்கள்

வானம் பொழிதல் வழமை;
ஆண்டாண்டாய்
மாரிகளில், சித்திரைச் சிறுமாரிக் காலத்தில்,
வானம் பொழிதல் வழமை;
வானமொரு
‘அட்சய பாத்திரமாய்’ அள்ளி
மழையமுதம்
கொட்டும்;
நிலம் குளிர்ந்து பச்சைப் பசேலாகும்!
இன்று நேற்றல்ல
இது கோடி கோடி ஆண்டாய்
நின்ற தொடர் சரிதம்!
நிலம் வெக்கை தனைத் தணிக்க
செய்கின்ற கை மாறும்!
செறிந்து விழும் மழைவெள்ளம்
உய்யவைத்து உயிர்களை உயிர்க்வைத்து,
மேடிருந்து
பள்ளத்தை நோக்கிப் பரவிப்பாய்ந்து,
ஓடிவந்து,
வெள்ளை மணற்கரையில் வீழ்ந்து,
கடலோடு
சங்கமிக்கும்;
இந்தத் தாகப் பெருங்காதல்
தம் முன்னோர் சென்ற தடத்தில்…
வழிவழியாய்த்
தம் மூதா தையர்கள் தவழ்ந்த
வழி வாய்க்காலில்…
ஓடிவந்து கடலில் ஒதுங்கும்!
“இத் தடங்கள்
எங்கே” எனத்தேடி இம்முறையும் வந்தமழை
தங்கிற்று; வழிகள்
தடைப்பட்ட காரணத்தால்!
வீடு வாசல் கட்டி,
வேலிகளை மதில்களாக்கி,
வாக்கால் களை வீதி என உயர்த்தி,
வெள்ளம் தன்
‘நிறமூர்த்தச் சேதியினால்”
நினைத்து வந்த பாதைகளை…
நிரப்பியே கட்டடக் காடாக்கி
யாம்புரிந்த
கைங்கர்யங்க ளாலே கதி, செல்ல
வழிகள்,அற்றுத்
தங்கிடுது வெள்ளம்.
மூழ்குது நம் தவ வாழ்வு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.