மீட்டிற்று

ஓர் ஐந்து மணித்துளிதான்…
உயிரிழந்து சடலமாகி
மாய்ந்தது மின்…இந்த வளத்திரு நாடெங்கும்!
இப்படி ஒருநிலமை,
தொழில்நுட்பச் சேதாரம்,
எப்பவும் நடந்ததுவோ முன் எங்கும்
ஒரே சமயம்?
இதை, இந்தப் பெருஞ்சிதைவை…
‘மின்உற்பத்தி மைய’
இணைப்புகளில் ஏற்பட்ட இடரை….
சிறுபொழுதுள்
சீரமைத்த வல்லவர்க்குச் சிரம் சாய்த்தேன்!
“இது என்ன
கொடுமை” எனச் சேய்கள்
குத்தும் நுளம்பிடை, மின்
விசிறி விளக்கில்லா
வேர்வை வெக்கைப் புழுக்கத்தில்,
நொந்தார்கள்;
அவர்கள் ’23 Kids’; நானோ
’90 Kid’ சொன்னேன்….
“நாங்கள் ஐந்தாறாண்டு
மின்சாரம் செத்த இருளில்,போர்
சூழ்ந்த போதில்,
குண்டு விழுந்திடையில்,
குப்பி விளக்கில்,
மின்விசிறி பிரிஜ் TV வோஷிங் மெஷின் ஏதும்
இல்லாத காலத்தில்,
O/L, A/L எடுத்தோம்.
‘பல்கலைக்குச்’ சென்றோம்.
பரவசமாய் வாழ்ந்தோம்.
எல்லாமும் தான் செய்தோம்” என்றேன்;
திகைத்தார்கள்!
“ஐந்தாறு ஆண்டா பொய்” என்று
கலாய்த்தார்கள்!
அன்றனைத் திடரும் அனுபவித்து,
அவை சகித்து,
இந்த நிலம் விட்டு ஏகாது, ஏதோ
துணிவில்
வென்றகதை
இவ் ஐந்து மணித்துளிக்குள் வியப்பாய்த்தான்
எந்தனுக்கும் தோன்றிற்று!
“எத்தனை கடந்து வந்தோம்”
இந்த இரவு பழசையெல்லாம் மீட்டிற்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.