இயற்கையொடு இழைதல்

எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
எதிர்வுகூறிப் பார்த்திருந்தோம்.
இதோவரும்…
இன்னும் இருமணியில்…
இரவினில்…
கொட்டும் மழையென்று
குடை, மழைக்கவசம், மின்
வெட்டு எழின் மெழுகுதிரி,
விழும் மரங்களைத் தறிக்கத்
தயார்நிலையில் ஆட்கள்,
தரையூறிப் பெருவெள்ளம்
வயல் தெரு வீட்டு வாசல்களை மூடிப்
பாய்கையிலே மக்களைப்
பாதுகாப்பாய் வெளியேற்றல்,
பாய் தலாணி தறப்பாள் உலர், சமைத்த உணவுக்கு
ஆயத்தம்,
அயலெங்கும் வெள்ளம் வழிந்தோட
ஏற்பாடு, என்றமளிப் பட்டு
வானிலையறிக்கை
“எப்ப வரும்” என்று…
உத்தியோக பூர்வ செய்தி
“இப்பவரும்” என்று…
எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்!
எதிர்வுகூறல் பொய்யாக…
என்ன நினைத்ததோ தாழமுக்கம்
புயல்மையம்
விண்ணரின் தொழில்நுட்பம்
தனைஏய்த்து;
முடிவெடுத்து;
“விண்ணரோ எனைவிட நீர்”
எனக் கேட்டு;
“செய்கிறேன் பார்”
“இன்றிங்கு வேண்டாம்” என எங்கோ
கலைந்துபோக…
திடீரென்று விண்ணின் திசையெங்கும் மிகவெளித்து
அடித்தது வெய்யில்.
அகன்றது முகில் மூட்டம்.
தெளிந்தது வானம்.
சிறகடித்தது காற்று.
அன்றாடக் காட்சிகள் வழக்கம்போல்
அரங்கேறி
சென்றுதம் காரியங்கள் செய்யத்
தொடங்கினார்கள்
மக்கள்;
மரஞ்செடிகள் மாடு கன்று பறவை பட்சி
வெக்கையைத் தேடி
வெளிக்கிட்டன எங்கும்.
எதிர்பார்ப்புப் பொய்த்தது;
இயற்கை “எங்கே எது எப்போ
நடக்கவேண்டும்” என்பதனைத்
தீர்மானம் செய்கிறது.
இது ‘புதிர்’ தான்!
இவ்இயற்கை தன்இஷ்டப் படி.. யாரும்
எதிர்வுகூறாப் பொழுதொன்றில்,
எதிர்பாரா நாளொன்றில்,
எதையும் முன் ஆயத்தம் செய்யாக் கணமொன்றில்,
‘எச்சரிக்கைச் சிவப்பறிக்கை’ எமக்குவரா வேளையொன்றில்,
மிச்சமீதி இன்றி விழுந்து புயல் மழையாகி…
தாழமுக்கம் பேரலையாய்த்… தாக்கின்
யாம் என்செய்வோம்?
நாங்கள் இயற்கையுடன் நட்புப் பாராட்டி…எதும்
தீங்கு விளைக்காது சேர்ந்தியங்கி
அதன் சாபம்
வாங்காமல் இனியேனும்
வாழப் பழகிடுவோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.