விதி

வேட்டையாடுது வேட்டுகள் -குண்டு
விண்ணைப் பிய்த்துச் சிதைக்குது -அட
ஏட்டிக்குப் போட்டிப் பீரங்கி; -நிலம்
இறக்க உழுதன டாங்கிகள்; – கணைப்
போட்டி இரவும் தொடருது – சனம்
போக்கிடம் அற்று அலையுது – “எவர்
மாட்டுப்பட்டு இறந்திடில் – என்ன?”
வலிமை நாட்ட…ஊர் மோதுது!

விண்ணிலே ஒளிக் கோலங்கள் – இடும்
விமானம்;ஏவு எறிகணை – தரும்
வண்ண வண்ண ஒளிப்பொறி;- எல்லை
வானில் கிளம்பி வரிசையாய்- வந்து
மண்ணை உயிரைக் குதறிடும் – மிசைல்;
வகை தொகையின்றி டாங்கிகள்;- வழி
பண்ணும் பெரும்பெரும் நகர்களை-சனம்
பலிகொடுக்குது வாழ்க்கையை!

என்று எங்கு முகிழ்ந்தது -அட
எதற்குச் சண்டை தொடங்கிற்று-நவம்
மின்னும் கொடிய கருவிகள்- திட்டம்
விளக்க…யுத்தம் பரவுது-அட
என்ன முடிவுக்காய் ஏங்குது? -ஊர்கள்
இறக்கத் தானோ விரும்புது?-எவர்
பண்ணும் வியாபாரம் நீளுது?-சனம்
பாவம்; விதியையார் நோவது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.