பிராயச்சித்தம்

உண்மை அறம் நேர்மை – நெஞ்சில்
ஊற… இரக்கம் கருணை கரிசனை
கொண்டு தாழ்வுயர்வுதனை-தூக்கி
கொஞ்சாது யாவர்க்கும் நன்மை சமநீதி
எண்ணுவோர் இங்கு இல்லை -மக்கள்
எண்ணம் அறிந்து அவர்க்காய் உழைக்கிற
திண்மையோ நெஞ்சிலில்லை- ‘மேலும்
சேர்க்கும்’ சுயநலம் ஆளும்… இதேஉண்மை.

எங்கள் பிழை தவறு -அட
எங்கள் தகுதி, தரம், ஆற்றல், வல்லமை
எங்கள் பலவீனம் -பற்றி
என்றும் எடைபோடோம் எம் குறை அறிவோ-
டெங்கள் செயற்திறனை – நாங்கள்
என்று உணர்ந்து எமக்கேற்ற திட்டங்கள்
எங்கள் வழிமுறைகள் – என
என்னத்தைச் சொல்லி நடந்தோம் இதுவரை?

இன்றுமே கற்பனையில் – இன்னும்
ஏய்த்துப் பிழைத்திடும் வீண் வெறு வாய் வீச்சில்
சென்று கொண்டே இருப்போம் – எமைச்
சீர் செய்ய எண்ணாமல் எம் குறை தீர்க்காமல்
முன்நிற்போர் மேற் குறைகள் – கண்டு
“முன்னேறோம்” என்போம்;
முயற்சி தொடர்ந்திடோம்.
இன்றெவ் வளம் அடைந்தோம்? -கைகள்
இணைத்துப் பலம்பெற்று வெல்ல முனைகுவோம்!

ஆண்டவன் காத்திடுவான் – என்றும்
ஆண்ட கதைபேசி அற்பத் தனம் கொண்டும்
நீண்டது நம் சரிதம் – இன்றும்
நிற்கிறோம் முன்னேற்றம் ஏது மில்லாமலும்
கூண்டோடு மாறவைக்க -நாளும்
கூடிய அக்கறை கொண்டும் முயன்றெழ
வேண்டும் நம்முள் இணக்கம் -அதெம்
வீழ்ச்சி களுக்கெல்லாம் தீர்வு தரும் நிதம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.