எதார்த்தக் கவிதை எழுது!

கண்களில் ஆயிரம் கனவு ததும்பக்
கவிதை எழுதடா கவிஞா!
காலத்தை வென்றிடும் கற்பனை கூட்டி நற்
கருத்தை விதையடா கவிஞா!
புண்களை மாற்றிடும் பொது மருந்தொன்றையே
பூசடா கவிதையாய்ப் புலவா!
பொய்களாற் சோடிக்கும் போதிலும்…வாழ்வின்மெய்
போற்று நின் பாக்களில் புலவா!

மகிழ்வுகள் மட்டும் மலராத வாழ்க்கையின்
மர்ம இடர், துயர் அறிவாய்.
வதைபடும் பாவிகள்,வளம் பலம் அற்றவர்,
வலிகள் ஆதங்கங்கள் புரிவாய்.
சகதிக்குள் ஆழ்பவர், அகதியாய்த் தேய்பவர்,
அந்தரம் அவலங்கள் தெரிவாய்.
அவைகளை நின்கவிக்கு ‘அணிகளாய்’ ஆக்கினால்
அது…புவிக்கொளிதரும் புரிவாய்!

ஆண்டவர், மீட்டவர், ஆள்பவர், வென்றவர்,
அன்றைய ‘நாயகர்’ எனவே
ஆக..,முற் பாவலர் அவர் எழில், மறத்தையே
ஆராதித்தார் வார்த்தை தொழவே!
மாண்டவர், தாண்டவர், மாண்பிழந் தோய்ந்தவர்
வாழ்வை நின் பூட்டன் பா தொடவே
மறந்தது; இன்றைக்கும் ‘அவர்களைப்’ போன்றவர்
மாய்கிறார்…அவர் ‘கதை’ உரையே!

மானுடம் என்பது மனிதர்கள் யாரையும்
வைத்திட வேணும் ஓர் நிரையில்.
மானுடர் யாவரும் மேம்பட வழிவகை
வைக்கணும்; ஓர் அற வழியில்.
ஏனிது இன்னுமேன் தோன்றலை பாவலர்
என்பவர் சிந்தனை யதனில்?
இனியேனும் கவிஞர்கள் எதார்த்தக் கவிதையில்
எழுதட்டும் சமநீதி புவியில்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.