புயலடிக்கப் போகிறதாம்.
புரட்டிற்று அறிவிப்பு!
புயலடித்தல் நிச்சயம்.
புயலெந்த வழியில் ‘கரை
கடக்குமெனக்’ கணித்தல் கடினம்.
“என்னவும்
நடக்கலாம்” தயாராக நாமிருப்பம்!
“சுழல்காற்றின்
வேகம் மிகுந்திடலாம்.
விண்ணிடியப் பேய் மழையே
தூறிடலாம்.
வெள்ளம் துரத்திக் கலைத்திடலாம்.
பாறிப் பலமரங்கள்
பாதைகளை மறித்திடலாம்.
தோட்டம் களனி வெள்ளம் மூடித் தொலைந்திடலாம்.
மாட்டோடு ஆடு கோழி மழையில்
மரித்திடலாம்.
மின்தடத்தில் தொலைத்தொடர்பில்
விளைந்திடலாம் பாதிப்பு.
துண்டாடப் படலாம் தொடர்புயலில் அயல்கள்.
காற்றும் அலைகளும் கலக்கிடலாம்
சூழ்கடலை
ஏற்றிடுவீர் எச்சரிக்கை கொள்வீர்”…
எனுஞ்செய்தி
எங்கும் பரவிற் றனலாய்.
இயற்கையின்முன்
எங்களால் ஏலாது எதுவும்!
அது நம்மை
என்னவும் செய்திடுங்காண்.
எம் அறிவு, பலம், செல்வம்
என்பவை ‘அதன்’முன் செல்லாத சில்லறைதான்!
ஆரவாரம் நாம் கொள்ள
அது நகர்ந்தும் போயிடலாம்.
சேதாரம் எமைத்திகைக்கச் செய்திடலாம்!
அண்மித்து
வந்துகொண் டிருக்கிறதாம்…
‘அதற்கு’ நம்நாட்டில் முன்
அடித்த ‘புயல்களைப்’ பற்றியோ
அவற்றாலே
அடைந்த ‘அழிவுகள்’ பற்றியோ
எதும் தெரிய
வாய்ப்பில்லை;
அதுதன் ‘குணம் காட்டும்’!
அது நம்மைச்
சாய்க்காமல்
கரையைக் கடந்து விலகியோட
நேர்வதுவும்…
அடித்தால் நின்றதற்கு முகங்கொடுக்கும்
மார்க்கங்கள் கண்டு, அதைக்
கடப்பதும்…தான் உய்யவைக்கும்!