மண்ணோடு ஒட்டிய வரிகள்

திட்டமிடல் சேவையில் நீண்ட கால அரச பணியாளராக விளங்கி கிளிநொச்சி மாவட்டத்தில் பல பதவிகளை வகித்து தற்போது கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி ஆணையாளராக கடமையாற்றும் அன்புக்குரிய திருஅ.கேதீஸ்வரன் அவர்கள் இலக்கியத்துறையில் ஈடுபாடும் படைப்பாற்றல் துறையில் ஆர்வமும் உடையவராக விளங்குகிறார்.
பளை பிரதேசத்தின் மைந்தனாக விளங்கும் இவர் தனது சொந்த பிறந்த இடம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலும்; நீண்ட காலமாக அர்ப்பணிப்பு மிக்க சேவைகள் செய்யும் ஆளுமையுடையவராக விளங்குகின்றார்.நான் இலங்கை நிர்வாக சேவைக்கு 2003இல் தெரிவுசெய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டு மாவட்ட பயிற்சிக்காக கிளிநொச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்ட போதே அவர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கடமையாற்றியிருந்தார். அவர் தன்துறை சார்ந்த விடயங்களை எவ்வாறு சிரத்தையுடனும் அக்கறையுடனும்,அர்ப்பணிப்புடனும் ஈடுபடுகின்றாரோ அதே போல தனது தனிப்பட்ட ஆற்றல்,திறமைகளிலும் சிறப்பாக செயற்படுகின்றதனையே கவிதை நூல் ஒன்றை சுயமாக வெளியிடுவதன் மூலம் நிரூபித்துள்ளார்.
சிறந்த மேடைப் பேச்சாளராகவும் பல்வேறு நிகழ்வுகளில் தனது பேச்சு கவிதைகள் மூலம் ஆர்வத்தின் மூலம் அரச சேவையாளர்கள் மத்தியில் ஒரு ரசிகர் கூட்டத்தை கொண்டவராகவும் விளங்கும் அ.கேதீஸ்வரன் அவர்களின் புதல்வர்களும் சிறந்த கல்வியியலாளர்களாகவும் கலைச் சொல்பாட்டாளர்களாகவும் இருப்பதனை அண்மையில் எமது பிரதேசத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் கண்டு மகிழ்ந்தேன்.
திரு.அ.கேதீஸ்வரன் அவர்களின் கவிதை ஆற்றல்,ஈடுபாடு என்பன தொடர்பாக அண்மையிலேயே எனக்கு அறியக்கிடைத்தது.ஓரளவு ஓசை வயப்பட்டு இருந்த பொழுதும் அனேகமாக புதுக்கவிதைசாயலில் தன் எண்ணத்தில் பட்ட விடயங்களை குறிப்பாக தனது அரசNவை அனுபவங்களை இவர் தனது கவிதைகளின் கருப்பொருள் ஆக்கி இருப்பது கவனத்த்pற்குரியது.ஏனெனில் அரசசேவையில் சுற்றுநிரூபங்கள்,நிலையியற்கட்டளைகளின் கிழ் ஒரு உத்தியோகத்தர் கடமை புரியும் போது பொதுமக்களுக்கு செய்யக்;கூடிய வேலைகள,சேவைகள்; தொடர்பாக ஏற்படக்கூடிய குறை நிறைகள், சாதக பாதகங்கள்,என்பன ஒரு அரச பணியாளர்; பார்வையில் எவ்வாறு இருக்கும் என்பது பொதுவாக பதிவு செய்யப்படுவதில்லை.பொதுமக்களின் கருத்துக்கள்,அவர்கள் கோபதாபங்கள்,அபிப்பிரயாங்களின் குரல்கள்,ஆங்காங்கு படைப்புக்களிலும் ஊடகங்களிலும் பதிவு செய்யப்பட்ட அளவிற்கு இவ்விடயங்களை கையாளும்,அரச கட்டளைகளுக்கு உட்பட்டுவேலை செய்யும், மனிதாபிமானம் பார்த்து அக்கட்டளைகளை மீறும் இடத்து ஒழுக்காற்றுத் தண்டனைக்கு உட்பட வேண்டி இருக்கும் அரச சேவையாளர்களின் பக்க நியாயங்கள் அவதானிப்புக்கள்,பாதிப்புக்கள் என்பன பொதுவாக படைப்புக்களில் வருவதில்லை. மூத்த படைப்பாளிகளான அரச சேவையாளர்கள் சிலரே தாம் சந்தித்த சவால்களை பிரச்சனைகளை நேரடியாக தம் படைப்புக்களில் உள்வாங்கி இருக்கின்றனர்.ஏனையோர் தமது அனுபவங்களை பதிவு செய்வதில் பின்நிற்பவர்களாகவே காணப்படுகின்றனர்.அரச ஊழியர் ஒருவர் ஒரு படைப்பாளியாக விளங்க பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிகள்,அனுசரிக்க வேண்டிய சுற்றுநிருபங்கள்,விளக்கம் கோரலுக்கு பதிலளிக்க வேண்டிய இக்கட்டுக்கள் காரணமாக தம் சேவை நெருக்கடிகளை தம் படைப்புக்களில் உள்வாங்க இவர்கள் தவிர்த்தும் இருக்கலாம்.
ஆனால் திரு.அ.கேதீஸ்வரன் அவர்களின் கவிதைகளில் பல அவருடைய பணியுடனும் பணி இடத்துடனும் தொடர்புபட்ட விடயங்களை நாசூக்காக பேசிச் செல்வதாக இருப்பது கவனத்திற்குரியது.
திரு.அ.கேதீஸ்வரனின் இக் கவிதை தொகுதியான ‘மண்’ 40 கவிதைகளை உள்ளடக்கி 88 பக்கங்களில் வெளிவருகின்றது. ஒரு கவிஞனால் எழுதப்படும் வழமையான சராசரியான பாடுபொருட்களை கொண்ட கவிதைகளுடன் சமூகம் பற்றி சிந்திக்கின்ற மொழி,குடும்ப வாழ்வு,காதல் சார்ந்த கவிதைகளும் இத்தொகுதிகளில் இடம்பெறகின்றன.

‘சிறுவர் கொடுமை’
என்னும் கவிதையில்,
“ அறிவு வளராத-அரும்புப் பருவம்
உணர்வு புரியாத-உணர்வுக்குழுமம்
கதறியழுகிறது
வறுமை பலருக்கு-வாய்ப்பை மறுக்கிறது
வாசல் படியோடு-வசந்தம் முடிகிறது.”
என்று சிறுவர்களின் மீதான கொடுமைகளையும் அவர்களின் நிலையையும் கண்டு கொதிக்கிறார் கவிஞர்.
‘புது ஆண்டு’ என்ற கவிதையில்,
“வாழ்வெழுச்சி வழி எழுச்சி
வளம் மிக்க வீட்டெழுச்சி
யார் எழுச்சி பெற வரினும்
அவர் தம்மின் மேல் எழுச்சி
பார் எழுச்சி கொள்ளும்
பணிவான ஆண்டொன்றாய்
ஆண்டொன்று வருகிறது”
என்று ஆர்ப்பரிக்கின்றார். அக் கவிதையில்
“ துப்பாக்கி சப்பி துப்பியதாய் இருந்த இம் மண்
எப்பாக்கியும் இன்றி எழுச்சி பெற வைப்பதாய்
நட்பாகி நிற்க நல் ஆண்டொன்று வருகிறது”
என்று புத்தாண்டை வரவேற்றும் மகிழ்கிறார்.
‘மண்’ என்ற கவிதையில்,
“பாடித்திரியும் எங்கள்
பன்மை சமூகத்தை
நாடிக் கழுத்தறுத்தல் நன்றோ
மப்பன்றி சால மழை காண மண் இன்று
மம்மி டடி சொல்லுதல் தகுமோ”
என்று மகாகவியின் வரிகளுடன் வினா அம்பு தொடுக்கிறார்.

‘வீட்டுத்திட்டம்’ எனும் கவிதையில்,
“இந்திய வீடு நேப் வீடு
இருப்பிடம் தேடில் சுவிஸ் வீடு
ஏத்தனை வீடு கேட்டலைந்தோம்
இருப்பது இந்த தகர வீடே
இருவர் ஒருவர் மூவருக்கு
இருக்க வீடு தேவையில்லையாம்
எங்களுக்கின்றும் புள்ளியிட
எந்த முறையும் வரவில்லையாம்
தங்;களுக் கிசைந்தோர் தரமுயர
எங்களுக் எந்த முடிவுமில்லை”
என்று தன் அரசசேவை அனுபவத்துடன் ஆதங்கப்படுகின்றார்.
‘அரச காணி’ என்ற கவிதையில்,
“மத்தியில் இருந்தாலும் மாகாணம் பெற்றாலும்
தத்துவ உருவத்தை தலைவர் தான் பார்ப்பாராம்
மொத்தமாய் சொன்னால் மொத்தமும் தவறப்பா
உருத்தாவணம் என்னும் உவத்திரம் தீரும் வரை” என்று இன்றைய‘உருத்து’ காலத்தில் உரத்துக் கூறிகிறார்.
‘என் ஊர்’எனும் கவிதையில்,
“கிளிநொச்சி என்பது உயர்ச்சியின் மறுபெயர்
உணருக அனைவரும்
வருக வருக வளர்சிக்ககு உம் துணை
வான் உயர் நகரம் இது வான் உயர் நகரம்
கண்டாவளையடன் கரைச்சியை இணைத்து
களணிகள் வளரும் கரையினில்
கடலும் களிப்புற தென்னையும்
பளையினில் மிளிரும்
கடல்படு திரவியம் கவினுறு பயிர்கள்
பூநகர் மண்ணில் ஒரு நிரையாக
ஓங்கிய நகரம் கிளிநொச்சியாகும்”
என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்.

‘பாரம்பரிய உணவு’ எனும் கவிதையில்,
“உலர் உணவும் உயிர்பும் தான்
எம்மூர் இருப்பைக்காப்பாற்றும்
அவ்வூர் இவ்வூர் சென்றாலும்
அசல் ஊர் என்பதை முழுதாக்கும்”
என்று அதன் மகிமையினைச் சொல்லிச் செல்கிறார்.
‘தொந்தி என்னும் நோய்’ என்னும் கவிதையில்,
“தேவைக்குதவாத கொழுப்பெல்லாம் சேர்ந்து
சேமிக்க சேமிக்க தொந்தியென்றாகியது
நாலு நடை எட்டி நடந்து வருபரும்
நல்லாக ஓடி வேலைகளை செய்வோரும்
தொந்திக்கு ஆளாகி தொல்லைப்படவில்லையய்யா” என்று தேகப்பயிற்சி உடலாரோக்கியம் என்பவற்றின் திறம் சொல்கிறார்.
‘பச்சிலைப்பள்ளி’ எனும் கவிதையில்,பளையிலுள்ள பழமையான ஊர்களின் பெயர்களை பெருமையோடும் புகழோடும் பேசுகிறார். இக்கவிதை இப்பிரதேசத்துக்கு பெருமை சேரக்கின்றது என்றால் மிகையாகாது.இதே போல‘கிளி நிலம்’ என்ற கவிதை கிளிநொச்சியின் மான்பையும் அதன் சிறப்பையும் பேசுகிறது‘.ஏக்கம்’,‘நம்பிக்கை’,‘காதல்’,‘இழப்பு’ போன்ற கவிதைகள் தன்னுணர்வுப்பாங்கான கவிதைகளாக சுயவிசாரனைகளாக மிளிர்;கின்றன. ‘காதல் படம்’ எனும் கவிதையில் இன்றைய தமிழ் சினிமாவின் அபத்தங்களை,அவலங்களை நக்கல் நையாண்டியுடன் பேசிச் செல்கின்றது.
‘மரபுக் கவியரங்கு’ என்ற கவிதையில்,
“மரபுக் கவிதைக்கு
மணமும் மதிப்புமுண்டு
வன்முறைக்கு கட்டாகி
வடித்தெடுக்க வேண்டுமதை
படிமம் தவறாது
பாடு பொருள் தேட வேண்டும்
எழுதி வடித்த இதை
மேடை இட்டு பாட வேண்டும்
ஓசை நயமும் ஒலி நயமும் கொண்டமைந்த
மலைகளாய் கோர்க்க
மனது நிறைவு பெறும்” என்று கவிதை அரங்கின் புகழ் பாடுகின்றார்.

‘கள்ளமணல்’,‘மலைவிலை’,‘கைஊட்டு’போன்ற கவிதைகளும், ‘உணவுப்பண்பாடு’,‘வாள்வெட்டு’,‘கொரோனாக்காலம்’ என்பன எமது சமுதாயத்தில் நடைபெறுகின்ற இன்னல்கள் பிரச்சனைகள் போன்றவற்றை காட்சிப்படிவமாக பிரதிபலிக்கின்றன.
இவை தெடர்பாக இவரின் வாழ்பனுபவங்களின் வெளிப்பாடுகளாக இக் கவிதைகள் விளங்குகின்றன.நான் ஏற்கனவே கூறியது போல நீண்டகால அரச சேவை அனுபவம் மிக்க இவர் தன்னுடய பார்வையில்,தன்னுடய கோணத்தில்,தன் அனுபவத்தில்,கண்ட விடயங்களில் சிலதை கவிதை ஆக்கி இருக்கின்றார். பொதுமக்களினதும்,அரச சேவையாளர்களின் பிரச்சினைகளையும் சவால்களையும்,வலிகளையும்,அவற்றில் உள்ள தீர்க்க முடியாத சில பக்கங்களையும் அவைக்கான நடைமுறை தடைகளையும் அரச பணியாளரின் அதிகார வரம்பெல்லைகளையும் சில பிரச்சினைகளிற்கான தீர்வுகளையும் முன்மொழிவுகளையும் அவருடைய கவிதைகள் முன்வைக்கின்றன.இது இவருடைய படைப்புக்களிற்கு கிடைத்த முதலாவது வெற்றி எனக் கூறலாம்.
ஓரளவு ஓசை நயமுள்ள,இன்றய சிக்கலான கவிவடிவங்களை நோக்கிச் செல்லாத,எளிமையான, எதுகை மோனை போன்ற கவிதையின் அணிகளை பற்றி அதிகம்; அலட்டிக் கொள்ளாத, விடயங்களை நேரடியாக பேசிச் செல்கின்ற, எடுத்துரைப்பு முறைமையில் புதுமைகளைக் கொண்டதான, தனது மனதிற்கு பட்டவற்றை மனச்சாட்சிக்கு சரி என்றுபட்டவற்றை நெற்றிப் பொட்டில் அடிப்பது போன்ற நக்கல் நையாண்டி கலந்த பாணியில் வெளிப்படுத்துவதாக இவருடைய கவிதைகள் அமைகின்றன. ‘மண்’ கவிதைத் தொகுதி இவருடைய கவிதையின் ஆரம்ப நிலை என்று வைத்து பார்க்க முடியாத கவிதைகளைக் கொண்டதாவும் இக் கவிதைகள் இவருடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் வெளிப்படுத்துவதோடு கவிதை எனும் வடிவத்தை சுலபமாக கையாளும் இவருடைய ஆற்றலையும் காட்டி நிற்கின்றன .
திரு.கேதீஸ்வரன் அவர்கள் அரச சேவையை பிரதானமாக கொண்டிருக்கின்ற அதேவேளை கவிதை துறையையும் தனது வாழ்வின் ஒரு பிரதான கூறாக கொண்டு முன்செல்பவர் தனது தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் எண்ணங்களையும் சக மனிதர்களுக்கும் இந்த சமூகத்தினருக்கும் இந்த சூழுலுக்கும் பகிர கவிதைகளை ஒரு கருவியாக பாவிப்பவர்.அவர் எமது நீண்ட பாரம்பரியம் மிக்க, பல்வகைமை கொண்ட பல்வகைப்பட்ட கவிதைகளை தொடர்ந்து வாசித்தும் பயின்றும் பரீட்சியப்படுத்தியும் வரும் சந்தர்ப்பத்தில் தனது கவிதா விலாச ஆற்றலை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என கூறி அவரின் கவிதை முயற்சி தொடர வாழ்த்தி பணிகின்றேன்.