மறக்கு மாமோ?

அன்புடன்; டீமு என்று
அழைப்போம் ; நாம் ; நிதமும் கூடி
இன்பம் சொற் களிலே கண்டோம் ;
இணையற்ற தமிழ்ப்பா பற்றி
ஒன்றல்ல நூறு பேசி
உயிர்த்தனம் ; அலுவல கத்தில்
அன்றொன்றாய் நின்று சேவை
ஆற்றினோம் ; மறக்கு மாமோ?

‘சடையாளி’ மண்ணின் தோன்றல்!
சந்ததி நிமிர்வால் வந்த
அடையாளம் சமய பக்தி,
அருந்தமிழ் மீது காதல்,
இடையறா தியங்கும் ஆற்றல்,
எவர்க்குமே தீங்கு இன்றி
நடந்தமை, இவற்றால், யார்க்கும்
நண்பராம்…. ‘.குமார சாமி!’

நிறைவான பணிகள் செய்து;
நியாயமே அற்ற மைந்தன்…..
மறைவினால் துவண்டு; தேறி
வாழ்க்கையின் சவால்கள் வென்று;
‘திருவெம்பா நாளில்’…. ‘காரைச்
சிவன்’ நிழல் சேர்ந்த…எங்கள்
பெருமக னாரின் ஆத்ம
சாந்திக்குப் பிரார்த்திக் கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.