கூத்தாடிகள்
சாகக் கிடப்பவனை சத்திர சிகிச்சைசெய்தோ
ஏதும் மருந்துபோட்டோ
எழுப்ப முயலாமல்
“நான்பெரிதா நீபெரிதா” என்று…
துடிதுடிப்போன்-
ஓலத்தை மேவி உரத்துரத்துச் சண்டையிட்டு
மோதிச்
சத்திர சிகிச்சைக் கருவிகளால்,
ஊசிகளால், மாறிமாறிக் குத்துண்டு
காயத்தால்
பாயும் குருதிபற்றி,
பலவீனம் நேர்தல்பற்றி,
வாடை நுகர்ந்து இரத்த வெறியோடு
ஊனுண்ணி மிருகங்கள் உறுமி வருதல்பற்றிக்,
காணாது…
கட்டிப் புரண்டு ஆளாளுக்கு
யாரும் சளைத்தவர்கள் அல்ல
எனச்சேற்றை
வாரி இறைக்கின்றீர்!
வதைபட்டோர் உமைநம்பி…
“வாழ்வூட்டித் தம்மை வளர்த்துயர்த்திக் காப்பி”ரென
காத்துப் பசிதாகம் கலையாமல்
தவிதவிக்க
நீவிர் அடிபட்டீர்!
உங்களையும், வதைபட்டோர்
காயத்தையும் மோந்து வரும்மிருகம்
அனைவரையும்
வீழ்த்துமென் றறிந்திருந்தும்
வீண்சண்டை பிடிக்கின்றீர்!
ஏட்டிக்குப் போட்டியிட்டீர்!
இறந்துகொண் டிருக்கின்ற
பாவிகளை மீட்டெடாமல் பழிவாங்கும் படலத்தை
ஆரம்பித்து வைத்துமீண்டும்
எம் அழிவைத் தூண்டுகிறீர்!