கண்ணீர்க் குமுறல்
கண்ணீர்த் துளி சிறிது.
கடல் கோடி தரம் பெரிது.
என்றாலும் உங்கள் ஒவ்வொரு
கண்ணீர்த் துளியும்
ஒன்றல்ல இரண்டல்ல
ஒரு நூறு துயர்க்கடலைக்
கொண்டதெனக் கண்டோம்!
கொடுமைகளைக் கண்முன்னே
கண்டுற்ற கண்களின் துளியொவொன்றும்
துயர்க்கடல்கள்
கொண்டதென அறிவோம்!
ஒருகோடி அலைக்குமுறல்
உங்கள் ஒருதுளி கண்ணீரில்
உறைந்திருந்து
பொங்கி அதுவும்
பொசுக்கென் றுதிர்கையிலே
எங்கோ பலகோடி அலைக்குமுறல்
அதால் திரண்டு
இங்குவர வைக்கும் என்றோ
துளி கசிந்து வரக்கூடா
தென்று தடுக்கின்றார்?
இன்று இதை நாம் உணர்ந்தோம்!