கோடைத் தாகம்

நிசப்த வெளியொன்றாய்க் காலமும் நீள்கிறது!
வசந்தங்கள் மட்டும்
வருவதல்ல இவ்வெளியில்!
கோடையும் மாரியும் குளிரும்
இலை உதிர்வுகளும்,
சாதாரண மிங்கு!
தகிக்கின்ற பாலைகளும்,
வேகவைக்கப் பட்டு வெடித்திறுகும் பாறைகளும்,
காய்ந்து இலைகருகி
கம்பிபோன்ற முட்புதரும்,
மேனி வரண்டு செதில் முள்ளால் அழகற்று
ஊரும் உயிரிகளும், ஒளியும்,
வெறும் கானலதும்
தானிங்கே நிறைந்திருக்கு!
இந்தத் தணலுள்ளும்
பூக்கும் சில தளிர்கள்; புன்முறுவல் வற்றினாலும்
காய்க்குஞ் சில செடிகள்;
கசப்பாய்…நீர்ப் பிடிப்புமற்று
வாடி வரண்டிருக்கும் வாய்கள்… ஆம்
வாழ்வுமொரு
ஓணானின் தோலாய் உலரும் அனேகமாக!
மாரி ஒரு மாசம்
குளிர்மூன்று மாசமென
ஈரங் கிடைக்கிறது என்றாலும்
தவறாமல்
சித்திரைச் சிறுமாரி தெற்போட்டம்
எனவானம்
முத்தஈரம் தந்து தகிப்படக்க நின்றாலும்
கோடை பெருங்கோடை கூடிய…நம்
வாழ்நாளை
வேகவைத்து நம்மை மீட்கா தலைப்பதனால்
மேனியும் சிந்தனையும் கூட
மிகவரண்டு
தாகம் தணியாமல்… நம்வாய்
தவிக்குதின்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply