அன்று விதைத்தவைகள்

‘வினை விதைத்தவன் வினையை அறுக்கிறான்.
தினை விதைத்தவன் தினையை அறுக்கிறான்.’
எனப் புளங்கிடும் வரிகளென் நெஞ்சிலே
ஈட்டி வீசின, இன்றும் தொடர்ச்சியாய்
வினை அறுக்கிறோம், இருண்ட விடியலை
வெளித்ததென் றெண்ணி துன்பம், துயர்,பயம்
தனையே நித்தம் அறுத்தும் எடுப்பதால்…
அன்று விதைத்தோரில் சாபம் இடுகிறோம்.

நல்ல விதைகளை நமது முன்னோர் அன்று
நட்டி ருப்பின்இன் றிடர்களே காய்க்குமா?
நல் வினைகளை முன்னோர் புரிந்திருந்
தால்… நாம் இன்றுதீ வினையைச் சுமப்பமா?
இல்லை… நம் முன்னோர் செய்த பழிபாவம்
எம்மைச் சூழ்ந்தது, இன்றும் வதைக்குது!
தொல்லை எப்போ தொலையுமோ? முன்னோரோ
தொலைந்தனர், நாமோ..அனுபவித் தழிவது?

இன்று நாங்கள் அனுபவித் திடிகிறோம்!
இதனுள் இன்றுநாம் நல்லதைச் செய்தமா?
இன்று நாம் எவ் வழிகளி லும்…சுய
இலாபம் காண…மனச்சாட்சி தன்னையும்
கொன்று பழிபாவம் கோடி புரிகிறோம்.
கொடு வினைகள் விதைக்கிறோம், நாளைக்கு
என்ன ஆகுமின் றறியோம், புதல்வர்கள்
எம்மைவிடத் திட்டுவார்…யார் திருந்துவோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply