வாழ்வின் புதிர்

எல்லை திசைகளற்றுக் கிடக்கிறது இந்த வெளி!
எல்லை திசைகளற்று
இரைகிறது இவ் ஆழி!
எல்லை திசைகளற்று பரந்திருக்கும் ஆகாயம்!
எல்லை திசைகள் எங்கே
எனத்தேடி
தொல்லை துயர்களுக்குள்
சுற்றிடுது உயிர் வாழ்க்கை!
மூலை முடுக்கெல்லாம்
முகிழும் உயிர்ப்பாலே
கோடான கோடி உயிர்கள்
பிறந்து வாழ்ந்து
போராடி வாழ்வைப் புரிந்தும் புரியாதும்
தூசு துரும்பினையும்
சொந்தமாக்கா ஏக்கத்தில்
சாவதையும் அவற்றின் சந்ததிகள்
வாழ்ந்து புது
போராட்டத் துள்ளே புரள்வதையும்
அவற்றினது
கோடான கோடி கனவுகள்
கற்பனைகள்
ஆசைகள் பாசம் அவாவும்
தலைவிரித்து
ஆட்ட அலைவதும் அந்தோ தெரிகிறது!
ஏனெதற் கென்று
புரியா…இவ் வியக்கத்தைத்
தானியக்குஞ் சக்தி
இவை…இரசித்தா இரசிக்காதா
தூணிலும் துரும்பிலும் துகளிலும்
ஓர் அணுவின்
கோணிலும் இருந்து கொண்டு
இயக்கிடுது?
எல்லை திசைகளற்றுக் கிடக்கிறது இந்த வெளி!
எல்லை திசைகளற்று இரைகிறது இவ் ஆழி!
எல்லை திசைகளற்றுப் பரந்திருக்கிங் ஆகாயம்!
எல்லைத் திசைகளெங்கே என்று..
காணத் திறனின்றி
தொல்லை துயர்களுக்குள்
சுற்றிடுது உயிர் வாழ்க்கை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply