நல்லையூர் நாதனை நாடு

வேலைப் பிடித்து நல்லூரவன் வீதியில்
வெள்ளி மயில்தனில் ஏறி – வந்து
மின்னுவான் ஆசிகள் கூறி – அவன்
காலைப் பிடித்திரு பத்தைந்து நாட்களும்
கண்களில் ஒற்றுவோம் கூடி – “எம்மை
காப்பாற்று” என்றாடிப் பாடி!

நல்லைத் திருத்தலம் நல்ல வரம் தரும்
ஞானம் அருள்நிலம் என்று – நாங்கள்
நாடினோம் பலபல ஆண்டு – இணை
இல்லை… எனப்பல சித்தரும் தேவரும்
இறைஞ்சிய ஞானவேல் உண்டு – ஆறு
எழில்முகன் அடிதொழு…கண்டு!

நாத சுரம் தவில் தாளம் முழங்கிட
நல்ல பஜனைகள் வாழ்த்த — பக்தர்
நாவில் அரோகரா ஆர்க்க – ஆட்டக்
காவடி ஆட பிரதட்டை யும் நீள
காலை மாலை சுற்றும் வேலை – காண
கண் நூறு இன்னுந்தான் தேவை!

நல்லூர் கொடியேற நாடே புனிதமாய்
நாளும் பரவசம் பூணும் – சனம்
நாலு கடல் போலச் சூழும்! – ஏதும்
எல்லைகள் அற்றோன் இருமாத ரோடு தேர்
ஏறத் திசைதிக்கும் போற்றும் – நின்ற
இடந்தெரியா தோடும் …கூற்றும்!

கோபுரம் மூன்றில் குறுமணல் வீதியில்
கேணியடி தனில் நிற்பான் – குகன்
கேட்கும் வரந்தந் தணைப்பான் – நெஞ்சின்
காயங்கள் ஆற்றும் அவன் திருநீறு காண்…
கழல்தொடு: கனவிலும் வந்து – கந்தன்
கடும் இடர்… ஒட்டுவான் நம்பு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply