தூக்குக் கயிறாகும் கேள்விகள்

உலகத்தைப் பற்றி உயர்ந்த இயற்கைபற்றி
உயிர்மூலம் பற்றி,
உருண்டோடும் வாழ்வுபற்றி,
இயக்குகிற சக்திபற்றி,
கடவுள்என்னும் ஒன்றுபற்றி,
கேள்விகள் நூறுநூறு கேள்விகள்
தினந்தினமும்
ஊறிக்கொண் டிருக்கிறது.
புத்தம் புதிதாக
விடைகாணாக் கேள்விகளின் மலை
மனதில் வளர்கிறது.
விடை இதுவோ அதுவோ என்ற
வியாக்கியானம்
முடிவெதையுங் காணாமல்
முட்டிமோதி முடிகிறது.
முடிவதற்கு முதற்கணத்தில்
புரியும் நிஜஞானம்…
பிறர்க்குப் பயனின்றிப் பின்னால்
யமன்வயிற்றுள்
சீரணிக்கப் படுகிறது!
எண்ணற்ற விடைகாணாக்
கேள்விக் கொழுக்கிகள் முதுகெல்லாம்
அலகுகுத்த
அவற்றினது தூக்குக் காவடியிற்
தொங்கிஆடும்
வலியிற் துடிப்பதுவே வாழ்வாய்க் கழிகிறது!
இதுதான் முடிவென்று எடுக்க முடியாத
பதிலற்ற கேள்விகளாற் தான்
இந்தப் பயஉலகம்
தேடி அலைகிறது நிஜத்தைத் திசையெங்கும்!
ஆனால் நிஜமோ
ஒவ்வொருவர் உள்ளேயும்
வாழ்கிறது என்பதனால்
கேள்விகளின் மிகக்கொடிய
தூக்குக் கயிற்றில்நாம் துடித்தல்
தொடர்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply