மாறாதபோட்டிகள்

கரைமணலில் நண்டு கால்களினால்
எழுதுகிற
கவிவரியின் அர்த்தமெது?
அதன் ‘தலைப்புத்’தான் என்ன?
அந்தக் கவிதைகளை அனைவரும் பார்த்துவிடக்
கூடாது என்று
விரைந்துவரும் அலைஅழித்துப்
போகும்: இந்த மர்மப் புதிருக்கு
விடைஎன்ன?
கடலினது யாரும் அறியாத இரகசியத்தைக்
கண்டறிந்த
நண்டினது மூதாதை…
வழிவழியாய்
எழுதிப் புவிக்குரைக்க முயல…
அலைகரைத்து
அழிக்கிறது!
எனது அயற்கரையில் மட்டுமல்ல…
உலகெங்கு முள்ள உப்புக் கடற்கரையில்
இதேநிலமை தானே?
இன்றில்லை நாளைக்கும்
ஓர்நண்டு தனது ‘பிறப்புரிமைச்’ செய்தியூடு
தானறிந்த வரலாற்றுத் தகவலைக்
கவிதையாக்கும்!
நாளை புது அலைகளும்
தம்பாட்டன் பூட்டன் சொன்ன
செய்திகளைத் தாமும் சிரமேற்று
எழுந்தழிக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply