தொலைந்த சுவைகள்

முதல் முத்தம் போல முதலில் சுவைத்த உருசி
மறக்காது என்றென்றும்.
மறக்கவில்லை இன்றைக்கும்!
இளமையில் …இற் றைக்கு முப்பது ஆண்டின்முன்…
சுவைத்த சுவை…நாக்கின் அரும்புகளின்
ஞாபகத்தில்
இருக்கிறது இன்றும்!

‘எங்கெங்கோ’ போய்வந்தும்
உருசிக்கவில்லை ‘அவைக்கு’ இணையான
உருசிகளின்றும்!
பெரிதாய் விலையில்லை,
‘நளன்’ சமைத்த விருந்தில்லை,
பெரிதாய்த் தரமில்லை,
ஆனாலும் இரசிப்பை அன்பை;
உருசி குறையக் கூடாது எனும்பொறுப்பை ;
“பொரித்தவித்துக்
காசுபார்த்தால் போதும்” என்றிடாத அர்ப்பணிப்பைக் ;
-கலந்தனரோ….
இன்றும் எண்ண நாவில் ‘நைல் நதியே’
பாய்ந்து பெருகுதுண்மை!

‘யாழ் இந்துக் கல்லூரி’
சிற்றுண்டிச் சாலையிலே ‘நடா’ அண்ணை தந்த போண்டா,
கல்லூரி இடைவேளைக் கால (ஐஸ்) அடிப்’பழங்கள்’
‘முத்திரைச் சந்தி’
சைவத்தின் கடையினிலும்,
‘ஐந்து சந்தி’ ‘பிளவு’சினிலும் உண்ட திறம் கொத்து,
‘சிதம்பர விலாஸில்’ சாம்பாறு தோய்ந்த தோசை,
‘தாமோதர விலாஸின்’ மசாலை,
மற்றும் நெய்முறுகல்,
‘தூள்ச் சம்பல்’ நல்லெண்ணெய் தொட்டென்றோ
பருத்துறையில்
எண்ணுக் கணக்கற்று
இரசித்துண்ட பஞ்சு இட்லி,
‘அப்பத்தட்டி’ தோசை,
அதற்காக நாலுசம்பல்,
‘மனோன்மணியம்மன்’ கோவில்
நவராத்ரிக் கடலை,
‘சிவன்’ கோவில் பொங்கல்,
ஐயர் கடை அப்பம்,
நல்லூரின் வீதியிலே நாம் இலயித்த ‘கரம் சுண்டல்’,
பயிறின் மேல் நெய்விட்டு
கத்தரிக்காய் பச்சடிசேர்
‘காரைநகர்’ ‘மொட்டை கறுப்பன்’ பெருவிருந்து,
கஷ்டம் தான்…. என்றாலும்
குறைவற்ற வீட்டு
முட்டைமா, குண்டு தோசை, கீரை, பால்ப்பிட்டு,
மச்சத்தை விட்டும்…. இன்றும்
மறவா…இறால் வறை, பொரியல்……

காலத்துடன் சுவையும் கரைந்து
வழக்கொழிந்து
போனதுவோ…?
‘எங்கெங்கு’ போனாலும் ‘அச்சுவைக்காய்’
ஏங்குதுள்ளம்;
அச்சுவையை எண்ணி “ஏதோ” பசியாறும்!
நாகரீகம் என்று
தரம் சுவை விலை நன்றாய்
ஏறிய விடுதிகளில் இன்றெங்கே தேடினாலும்,
பீசா, பர்கர், பொரித்த kfc சிக்கன் என
‘உலக மயமாதல் உணவு’
வீடு வரை வரினும்,
சூடு காட்டப் பட்டு
‘சுகர், கொலஸ்டரோல்’ ஏறவைக்கும்
நாகரிக விரைவுணவு (fast food)
நம் முன் குவிந்திடினும்,
அன்றொருநாள் சுவைத்தருசி அழியாமல்
உயிர் நாவில்
தங்கியின்று ஏக்கம் தருகிறது!
என்னென்ன
பண்பாட்டு மற்றம், சுவைமாற்றம்,
சமையல்முறை,
எம்வயது ஏற்றம், என…எது தான் வந்தாலும்
‘உயிர்குழைத்துச் செய்த’ உணவுகளைத்
தொலைத்துவிட்டு
நாவை மரக்கவைக்கும் நச்சுணவை
உண்டபடி
‘நளபாகம்’, ‘அறுசுவையை’
google இல் நா தேடிடுது!

This entry was posted in நிகழ்வுகள். Bookmark the permalink.