இன்றைக்கும் தோன்றின எலும்புகள் சில…நேற்று
மண்டையோடு ஒன்று வந்தது….
இரு துளைகளுடன்!
காலெலும்பு விலாவெலும்பு
கையெலும்பு விரல்களெனத்
தோண்டவே மீண்டன நெடுந்துயில் கலைந்தபல!
யாருடைய தென்று யாருக்குத் தெரியும்? இதன்
ஊரென்ன பேரென்ன உலகா
அறிந்து கூறும்?
ஞாபகம் எனை கடந்த போர் யுகத்துள்
தள்ளிற்று…
காணாமல் போனான் என்
மருமகன் முறையானோன்…
வாழ்ந்தான் இரண்டு வீடு தள்ளி
இளங்கன்றாய்!
ஊரடங்கிப் போன ஒருஇரவில்,
சொந்தமண்ணில்
மீளக் குடியேறி மிகுஅச்சம் சூழ வாழ்ந்த
நாளில்,
திடுக்கிட்டு நான்விழித்தேன்…
அவன் கதறல்
ஓலம் எழுந்து உடைந்திருளில் கரந்துபோச்சு!
மர(ண )நாய் கொண்டுபோன
விறாத்துக்குஞ் சொன்றானான்!
அருகில் எவருமற்று அவலம் சுமந்து போனான்!
விடிவினொளி வீழ்ந்தும்
தெரியாப் பொருளானான்!
முடிவில்லாத் தேடலிலும்
முகம் காட்டாப் புதிரானான்!
பிடிக்கவில்லை …காணவில்லை
என்றன துவக்கு வாய்கள்…
விடை ஏதும் தந்ததில்லை
விசாரித்த பல குழுக்கள்…
கரைந்து போச்சாம் காலம்
கண் மூடித் திறப்பதற்குள் …
இரைகிறது அவனின் ஓலம் இன்றும்
என் மனச் செவியில்….
இருந்து விடக் கூடாது அவனெலும்பு
இன்று, நாளை
‘வருபவற்றுள்’…. என்றுநேரும் எனது உயிர்….
ஆம் அயலில்
இருப்பவரில் எத்தனைபேர் ஏங்கியுள்ளார்
என்நிலையில் ?





