உன்னுடைய தீர்ப்புக்கள்

நீகண்ணை மூடுவதால்
நினக்கே இருளுமன்றி
பூமிக் கிருளாது !
புரிந்துகொள்ளும் மனநிலையில்
நீயிருக்க மாட்டாய்!
நினைச் சூழ்ந்தோர் இருட்டினையே
காண்பார்கள் என்றே நீ
கற்பனையில் துள்ளுகிறாய்!
“பார்த்தீரா சொன்னேன் என் பார்வையை
அது ஒன்றே
வேதம்” எனத் தீர்ப்புரைப்பாய்!
வில்லங்கம் ஏன் என்போர்
:”பாவம் நீ” என்று
பறையாமல் போகின்றார்!
மூடிய கண்ணோடு முணுமுணுத்து
உன்பாட்டில்
நீதிரிய…வழிப்போக்கர்
நின்று உனக் கிரங்குகிறார்!
வேண்டும் நடுநிலைமை விமர்சகர்க்கு
என்கின்ற
ஆகக் குறைந்தபட்ச அறிவின்றி
உன்னுடைய
இலக்கிய அரசியல் இருப்புக்காய்
“இவன் மட்டும்
உலகின் கவிஞ”னென உளறி
நீ கண்மூடித்
தீர்ப்புரைப்பாய் உன்பாட்டில்;
அத்தீர்ப்பை எவர் ஏற்றார்?
ஆருன்னை நீதவானாய் ஆக்கினார்…?
நீயே…ஆனாய்!
தீர்ப்புரைத்த நீயோ அது ஏதோ
ஐ.நா வின்
தீர்மானம் போலென்றோ
தலையை சிலிர்ப்புகிறாய்!
நீகண்ணை மூடியதால்
நினக்கே இருளுமன்றி
பூமிக் கிருளாது
என்றும் நீ இதைப் புரியாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply