வழி மொழிகிறேன்

சீதளக் காற்று செந்தமிழ் பாட
தேனிசை வார்த்திடும் குழலும்,
சிந்ததன் சந்தம் சிந்திடும் தவிலும்,
செவியூடு உயிரினைக் கழுவும்!
நாதமும் இலயமும் நம்முடல் தழுவும்
நரம்பிலே அமுதமே பரவும்!
நம் நிலம் தனிலே பெறும் சுகம் அதிலே
ஞானமும் நல்குமெம் கலையும்!

தாய்மடிச் சுகமும் தமிழதன் வரமும்
தலைமுறை போற்றிய மதமும்
தந்திடும் நலமித் தரணியில் வேறு
தரையெதும் தருமா? உரையும்!
நோய் நொடி தீர்க்க வழிசொலும் வாழ்வு
நூற்றாண்டு ஆழவும் உதவும்!
நொந்திருந் தாலுமே இந்த நிம்மதி வே
-றூரில் வராதிதை உணரும்!

செந்நிலம் விட்டு சீவியம் காக்க
சென்றனர் சோதரர் பலபேர்.
செல்வம் பகட்டும் செழிப்பும் மிடுக்கும்
திறம் கலை கல்வியும் புகழும்
கண்டனர்! நனவிற் கலக்கினர்! எனினும்
கசிகிறார் சொந்த ஊர் நினைவில்!
“இன்பம் தாய் மண்ணின் இதம்” எனச் சொன்னார்
இதை வழிமொழிவனென் கவியில்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply