பார்த்துக்கொள்!

பொருள்பெரிதாய்த் தேவையில்லை புண்ணியனே..
நின் நீங்கா
அருளைத்தான் வேண்டி அழுதோம்
நல்லூரவனே!
வந்து தொடு;
எங்கள் மனவருத்தம் தீர்; தீர்த்தம்
சந்தனமும் நீறுமள்ளித் தா;
பஞ்சாலாத்தியிலே
கொழுந்து விடும்சுடரில்
குளிர்முகங்கள் ஆறுகாட்டு;
அழுத விழிதுடைத்து
ஆனந்தப் பரவசமெம்
உள்ளே நிரப்பு;
உடல் புல்லரித்துயிர்க்க
வெள்ளமெனப் பொழிஅன்பு;
கூர் வேல் நுனியாலெம்
மும்மலச் சூரர்கள்
முளைக்கையிலே கிள்ளியெறி;
எம்பிறவித் தீக்குணங்கள் எழும்,
மகுடி ஊதி அடி;
பாவியரின் தேவர்களின் பழிதுடைக்க
அரன்நுதலில்
மூன்றாம் விழியில் முகிழ்ந்த
ஒளிப்பிளம்பே….
புற உலகில் மட்டுமல்ல
புகுந்து அகங்களுள்ளே
இருளை விரட்டு;
எமைத் தொடரும் விதிப்பழியை
எரித்தும் பொடியாக்கு;
ஈடில்லா நோன்பிருந்து
ஆறு தினமும்நின் அடியில்
தவங்கிடந்து
“ஆறுதலைத் தா” என்றோம்…அணைத்துக்கொள்;
புதுப்புதுசாய்ச்
சூரர்கள் தோன்றுகிறார் தொடர்ந்து;
அவர்களினைப்
பார்த்துக்கொள்…
எங்களையும் பார்த்துக்கொள்…
அருகிருந்து!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply