மனித மனம்

சிங்கத்தி னுள்ளே சிங்கமனம் இருக்கிறது!
பொங்கும் புலிக்குள்
புலிமனம் இருக்கிறது!
நாகத்துள் நாகமனம்,
நரிக்குள்ளே நரியின் மனம்,
காகத்துள் காகமனம்,
கரடிக்குள் கரடிமனம்,
பாழ்பருந்து கழுகுக்குள் பருந்து
கழுகுமனம்,
இருக்கிறது!
ஆனால் இந்த மனிதருக்குள்
இருப்பது மனிதமனம் மட்டுமில்லை!
நாய் ,சிங்கம்,
கரடி, புலி, காகம்,
கழுகு பாம்புக் குணமெல்லாம்
கலந்ததெல்லோ மனித மனம்!
கண்முன் கொடூர குண
விலங்குகளைக் கண்டு விலத்திடலாம்…
வேட்டையிட்டும்
விழுத்திடலாம்…
ஆனால் நரருள் மிகுந்திருக்கும்
விலங்குக் குணமெதுதான்
என்றார் விளங்கிடலாம்?
குரூரமும் காழ்ப்பும் உள் குவித்து
வெளியினிலே
ஒரு சாதுவான உயிரிபோல்
நரன்தன்னை
வெளிக்காட்டா திருப்பான்!
வெளியே தனைமறைத்து
எழுந்தாரைத் தாக்குவது
எனப் பார்த்தும் காத்திருப்பான்!
கொடிய விலங்குகளை விடவும்
கொடூரமாக
பிடித்து எவரைப் பிய்த்துத்
தனைவளர்த்து
தன்இலாபம் பசி தீர்க்கத் தான்
மனிதன் ‘பொய்க்கோலம்’
கொண்டு கடைசிவரை பிறர்க்குக்
குழிபறிப்பான்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply