கோடை மழைக்குளிப்பு!

இந்த மழை எதை எதைக் கழுவப் பெய்கிறது?
இந்த அனற் கோடையிடை
‘சித்திரைச் சிறுமாரி’
எதை எதனைக் கழுவிடுது?
எதைக்குளிக்க வார்த்திடுது?
எதை எதை திருமுழுக்கு ஆட்டி அருள்கிறது?
வளியை முழுகவைக்கும்…
வான்தொட் டயலெல்லாம்
குளுகுளென் றிருப்பதே
இதற்கு ஒரு சான்றாகும்!
காற்றைக் கழுவிவிடும்…
இந்நாளில் வெகுதொலைவில்
வீற்றிருக்கும் கோவில்மணி மிகத்தெளிவாய்ச்
செவிவீழ்ந்தெம்
உயிரைக் கரைப்பது இதற்கு நல்ல ஆதாரம்!
பயிர்களைச், செடிகொடியை,
பலகிளைகள் கொண்ட பெரு
விருட்சங்களை, இலையை,
மர நிழலை, வேர்களினை,
உருகக் கொதித்தபெருங் கற்களினை,
ஊற்று(ம்) மழை
கழுவிக் குளிரவைத்து
வெக்கை தனைக் கலைக்கும்!
இழகவிட்டு, மண்ணைப் பெருமூச்சு
விடச் செய்து,
கிளப்பிய மண்வாசம்
ஊரைக் கிறங்கவைத்த
மழைவெள்ளம்…
ஈரஞ் சுவறி அயல் மூழ்க மேவும்!
தெருக்களில் திரியும்
கால்நடை கட்டாக் காலிகள்,
மரங்களில் ஒதுங்கும் மணிக்குயில்கள்,
நிலத்தடிக்கீழ்
உறையும் உயிர்கள்,ஒவ் வொன்றையும்
தொட்டவற்றின்
எரிவுகளை இந்த மழை ஏற்கும்!
மாரிகளில்
தொடர்ந்துமூடும் மழைபோல அல்ல…
‘கதிர் உச்சம்-
கொடுக்கின்ற’ நாளையண்டி
வருமிந்தக் கோடைமழை
திசைதிக்கின் தகிப்பை
தீக்காங்கையை அடக்கும்!
சூழலைச் சுட்டு வறுத்து வற்றல் போடும்
கோடையின் வெப்பிசாரக் குணம்குறைக்கும்!
கருகுகிற
புல்லையும் பூண்டையும்
புத்துயிர்க்க வைத்து…நிற்கும்
வெள்ளம் எம் வீடுகளின்
வெக்கை அனல் விரட்டும்!
“எதையெதையோ கழுவும் இக் கோடைமழை
விதியின்
சதியாலும் வாடித் தவிக்கும் எம்
மனங்களிலே
நதிபோல பாய்ந்து நனைத்து
அதில் கிடந்த
உறங்கு நிலை விதைகள் ஒவ்வொன்றும்
முளைப்பதற்கும்
அருளவேண்டும் வழமைபோல்” என்று
இன்றும் வேண்டுகிறேன்!
“வரும் மாரி வரைப் போதும் அது”
உயிர்ப்பைக் காத்திடுவேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.