மாற்றம்?

வரலாற்றைத் தன்னுடைய இஷ்டம்போல் மாற்றி
வரைந்தது காலத்தின் கை;
வாழ்வும் தலைகீழாய்
மாறிற்று!
நாங்கள் வழிவழியாய்ச் சொன்னகதை,
பாடிய பாடல்களின் பண்,
சொல் முறை, பாடு
பொருளெல்லாம் மாறிற்று!
பொதுவாய்த் துவக்குகளால்
வரைந்த கதைகள் வழக்கொழிய
வெறும் சீன
வெடிகளால் தோல்விகளை
வெற்றிகளைக் கொண்டாடிக்
கடன்தீர்க்கும் கதைகள்
களத்தில் வாகை சூட..அன்று
நிஜம் கண்டு அஞ்சாதோர்
நிழலுக்கும் தடுமாறி
புஜபல பராக்கிரமம் பொருளிழக்க…
அஞ்சி அஞ்சிப்
பேசா மடந்தைகளாய்
ஊமைத் துரைகளுமாய்
தாழ்ந்து தவிக்கும் சரிதமும் மாறிற்று!
“என்னதான் செய்ய ஏலும் எம்மால்”
எனும் ஐயம்…
“என்னதான் செய்வார்கள் இவர்கள்”
எனும் மமதை…
சின்னா பின்னமாக்கும் திசைதிக்கை!
இதை எவர் தாம்
இன்று உணர்ந்தார்கள்?
எரிக்கிறார்கள் ஊர்க்கனவை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.