காப்பதார்…எம் கதை தேறி?

வீதிகள் தோறும் மானுட வெள்ளம்
வேதனை தீர்த்திடத் தேங்கும்.
“மேதினி பார்த்தே மீட்டிட வேண்டும்
விரைவில்” எனும் குரல் ஓங்கும்.
நீதியும் செத்து நியாயமும் பட்டு
நிதி திருடப்பட வீங்கும்
நிச்சயம் அற்றநம் வாழ்வில் இன்றோ..நிஜ
நிம்மதி கெடும்; உயிர் ஏங்கும்!

விண்கல வேகமாய்ப் போகும் விலைவாசி
வேண்ட வழி அற்றோர் கூட,
‘மிச்சம் பிடித்ததில்’ வேண்டுவம் என்றாலோ
வீதி வரிசைகள் நீள,
மண்ணெண்ணை, டீசலை விடுவம்; சோப், பூச்சு
மா, செருப்பும் விலை ஏற,
‘மாறாத சம்பளத் தோடு’ தவிக்கிறோம்
மண்ணில் வழியுண்டா வாழ?

காணி விறகு, கருக்கு மட்டை, பொச்சைக்
கழித்து…எரிவாயு தேடி,
கட்டாமல் விட்டோம் விறகு அடுப்பினை…
காஸ், மண்ணைக் குக்கரை நாடி,
காஸ் இல்லை, மண்ணெண்ணை இல்லை, மின்னும் தடை
காசும் இல்லா நிலை கூடி,
கையைக் கடித்து வயிற்றைக் கடிக்குது
காப்பதார் …எம் கதை தேறி?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.