மெய்

நீங்கள் உரைத்துவிட்டால்,
நீவிர் நினைத்தபடி
ஓங்கிக் குரல்வைத்தால்,
உம் தோழர் எல்லோரும்
சேர்ந்து முழங்கிவிட்டால்,
சிந்தனையைப் பகிர்ந்தால்,
நீரும் விருப்பிற்கு ஏற்ப எழுதிவிட்டால்,
தீர ஆராயாதும்
பார்வை பகிர்ந்துவிட்டால்,
ஊடகத்தில் எதையும் உரைத்து விமர்சித்தால்,
யாரையும் உணர்ச்சி வசப்பட்டுத்
தூற்றிவிட்டால்,
கோபத்தில் இழித்துப் பழிசொன்னால்,
அது உண்மை
ஆகிவிடும்;
அதுவே முடிந்த முடிபாகும்;
விதி அதுவென் றாகும்
என்று நினையாதீர்!
எது நிஜமாய் நடந்ததுவோ…
எது நிஜமோ…அங்கு
எதுதான் யதார்த்தமோ
அது ஒன்றே வாகைசூடும்!
விதியும் காலமும்…
வேறெவைதான் மறைத்தாலும்
அதையெல்லாம் வீழ்த்தும்!
அற மெய்யை ஒளிரவைக்கும்!
“தர்மத்தின் வாழ்வுதனைச் சூதுகெளவும்
மறுபடியும்
தர்மமே வெல்லும்” இது சாஸ்வதமாம்!
யார் எவர்தான்
குத்தி முறிகையிலும்
குவலயத்தில் அரங்கேறி
உண்மையைச் சொல்க உறுதியாக;
தயங்காமல்
உண்மையின் பக்கம்செல்க உறவாக;
அது உன்னைப்
பொன்னாக்கும்!
சுடுகின்ற துன்ப நெருப்பினாலே
உன்னைப் புடம் போடும்.
மேலும் ஒளிரவைக்கும்!
வேண்டுமென் றுரைத்தபொய்…
விருப்பு வெறுப்புக்காய்
கூண்டேறிச் சொன்ன குறை…
போட்ட சாபங்கள்…
சீண்டி உரைத்த பழி…
தேடி மொழிந்த பிழை…
உம்மன வக்கிரத்தால் உமிழ்ந்தகாழ்ப்பு…
எல்லாமும்
சும்மா சிதைந்துபோகும்!
மெய் மீண்டும் மிதந்து…கறை
எல்லாம் களைந்து எழும்!
முடி சூடி நிற்கும்!
மெல்ல ஒளிரும் மெய்
மேதினி வணங்க ஆளும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.