சூழும் அறம்.

வரலாறு தடுமாறும் நேரம் – எங்கும்
வலி சூழ எழும் சோக கீதம்
தருமங்கள் இடும் நூறு சாபம் -செய்த
தவறுக்கா பரிகாரம் தேடும்?

வலிமைகளொடு அன்று நின்று -திக்கின்
வரம் பெற்று சமராடி வென்று
பழி பாவம் புரிந்தார்கள் அன்று -அந்தப்
பலன் சூழும் தலைகீழாய் இன்று.

அசைத்தாட்ட முடியாத ஆற்றல் -என்றும்
அவையாள திறம் திட்டம் தீட்டல்
வசதிகள் அதிகாரம் காவல் -யாவும்
மடைமாறும் அறம் ‘தீர்க்கும்’ போதில்.

எவர் தெய்வம் எனச் சொல்லினாரோ -அந்த
இறை, பேயே எனச் சொல்லு மாறோ
புவி மாற வினையாற்றும் ஊரோ -தர்மப்
புதிர் தீரும் உணராத தாரோ?

பலம், நட்பும், பணமும் செல் வாக்கும் -என்றும்
பயன் அற்ற தறத்தின் முன் தேறும்
உலகில் தன் சமநீதி மீட்கும் -காலம்
உயிர் மெய்யும் அழியாது காக்கும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.