நினைவலைகள்

நினைவுகள்தாம் எம்மை வழிநடத்தும்
ஆசான்கள்.
நினைவுகள் தான் எமக்கு
கரைகாட்டும் கலங்கரைகள்.
நேற்றை நினைவுகள் தான்
நாளை நனவுகளின்
ஊற்றுக்கண். ஆதாரம்.
உளச்சீற்றப் பொறி முளாச
காற்றாய் அவை உதவும்.
கனவுகலையாது காக்கும்.

நினைவலைகள் கோடி கோடி
மனக்கடலில் நின்றடித்தும்
நினைவின் சிலஅலைகள்…
‘ஆழிப்பேர் அலைகளைப்போல்’
மனதில் அவற்றின் ‘அடி’
மறையா வடுக்களாக…
நனவில் அவைபுரிந்த அழிவின் கொடுமைகள்
அழியாக் கதைகளாக…
அகமெல்லாம் எதிரொலிக்கும்!
உளத்திலின்றும் ரத்தம் ஊறவைக்கும்
அவ் அலையின்
பேரிரைச்சலும்…அதால்
எழுந்த பெரும் உயிர் அவல
ஓலங்களும்…இன்றும்
உளச்செவியைச் செவிடாக்கும்!
ஆழிப்பே ரலையாய் எம்
அகக் கனவைத் துடைத்தழித்த
கோர நினைவலைகள்…
கொஞ்சம் யாம் தளர்ந்தோய்ந்து
போகும் பயணத்தில் புத்துணர்வை மீள ஊட்டும்.

நினைவுகள் தாம் எம்மை
வழிநடத்தும் ஆசான்கள்…
நினைவுகள்தான் நிஜத்தின்
கரைகாட்டும் கலங்கரைகள்.
நினைவுகளை உள்ளே மீள் நினைந்து
போற்றுவதே
மனக்காயம் மாற்றுதற்கும் மருந்து எனும்
யதார்த்தம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.