வேம்பினது புண்ணியத்தால்

வைகாசிக் காற்று அடிக்கத் தொடங்கிய
நேற்றிருந்து என்முற்றம் நெடுக
இறைந்திருக்கும்
வேம்பினது பூக்கள்!
முற்றத்தில் பாய்விரிப்பாய்
காலடிகள் பட்டுக் கசங்கும் அவை;
மரத்தில்
பூத்துச் சொரிந்து
பொன் மயமாய்க் கிளைநிறைத்து
காற்றில் உதிரும்!
கடக்கும் என் தலைமேலும்
தூவப் படும்;
எண்ணித் தொலைக்க முடியாத
ஆயிரம் ஆயிரம் அவற்றின்…
கசப்பு வாசம்
அயலனல் அகன்றதை அறிவிக்கும்!
சிலுசிலென்று
உயிர்துளிர்க்கும் வேம்பு
ஒரு கர்ப்பிணி போலே
பூரித் திருக்கும்!
நிதமும்… இருபொழுது
கூட்டியப் பூக்களைக் குறைகளைந்து
காய வைத்து
ஆயத்தம் செய்வார்கள்
வடகங்கள் போடுதற்கு!
தன்பூவில் நாங்கள் வடகம் படைப்பதனை
என்றும் அறிந்திடுமா இவ் வேம்பு?
அது உதிர்க்கும்
பூக்கள் பல சேற்றில்…
அழுக்கான வாய்க்காலில்…
சேரும்;
சிறிதளவே வடக வடிவெடுக்கும்!
சென்ற முறைபோல இம்முறையும்
இவ் வேம்பின்
புண்ணியத்தால் வரவுள்ள
விரதகாலச் சுவை கூடும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.