அருளாதோ தெய்வம்?

பசியென்ற பொறி இன்று புகைகின்றது -“நாளை
பலிகேட்கும் அது” என்ற கதைவந்தது.
உசிரோடு விளையாடும் விளையாட்டிது -பாய்ந்து
உயர்கின்ற விலைவாசி சதி செய்யுது!

இதுபோன்ற இடர், பஞ்சம் சமர் நாளிலும் -வந்து
எமை மாய்த்த திலை; உள்ள பொருள் செல்வமும்
அதிகாரம் அறத் தேயும்; பண வீக்கமும் -எங்கள்
அபிலாஷை களைக் கொல்லும்; மனம் ஏங்கிடும்!

“அது இல்லை இது இல்லை” கதை நீளுதே -காசு
அதும் அற்பப் பொருளாச்சு; பயம் சூழுதே
உதவாது வருமானம்; விலை ஏறுதே -‘ஏழ்மை’
உயிர் வாழும் சகலர்க்கும் பொதுவாகுதே

எதனாலே எதனாலே பிழை நேர்ந்ததோ -இங்கு
எவர் செய்த செயலாலே பழி சூழ்ந்ததோ?
விதி மாற்றி பெரு இலாபம் சிலர் கொண்டரோ -செய்த
வினை…எட்டுத் திசை திக்கும் அழ வைக்குதோ?

நதி மூலம் ரிஷி மூலம் அறிந்தென்ன கொல்? -வந்த
நலிவுக்குப் பரிகாரம் எது? கண்டு சொல்.
கதியற்று கடன் மேலே கடன் வாங்கிடில் -நாளை
கடன் தீர்ப்ப தெவர்? உண்ண இருக்காது நெல்!

எவர் மீட்பர்? எவர் ஏய்ப்பர்? புரியாததால் -மீள
எது மார்க்கம் என யார்க்கும் தெரியாததால்
அவிகின்ற தெழிற் தீவு; இதைக் காப்பதார்? -தெய்வம்
அருளாதோ பசிச் சாவு வருமுன்புதான்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.