மெய்க் கவிதை

உண்மைகளைச் சொல்ல
ஒருபோதும் அஞ்சாமல்
என்கவிதை ஆர்க்கும்!
எமனோடும் போராடும்!
எந்த மிரட்டல் எழுந்திடினும்
என்கவிதை
உண்மையின் பக்கத்தில் உட்காரும்!
யாரெவர்தான்
உண்மைக்காய் நிற்பாரோ
உண்மையினைக் காப்பாரோ
அன்னவரை என்கவிதை அணைத்து
உறவாடும்!
உண்மையின் குரலை ஒலிபெருக்கி
என்கவிதை
எண்திக்கும் கேட்கவைக்க
‘ஒலிப்பன்னி’ போல் இயங்கும்!
“உண்மைமட்டும் வெல்லும்,
உண்மைமட்டும் ஓங்கும்,
உண்மை ஒருநாள் ஊருலகுக்குத் தன்னை
உண்மையாய் வெளிப்படுத்தும்,
உண்மை ஒன்றே வாகைசூடும்,
உண்மை ஆளும்,” என்பதனை
உறுதியாக நம்புகிற
என்கவிதை அதைப்போற்றும்!
சங்கெடுத்து ஊதி வாழ்த்தும்!
என்கவிதை பொய்க்கென்றும்
சேவகங்கள் செய்யாது.
என்கவிதை போலிகளின்
கவர்ச்சிக்குள் சிக்காது.
என்கவிதை ‘மாரீசம்’ கண்டு மயங்காது.
என்கவிதை அதர்ம
அடாத்தின்முன் பணியாது.
என்கவிதை பிழை தவறை ஏற்றப்பாற் செல்லாது.
என்கவிதை ஊழல் இலஞ்சத்தை
மதியாது.
என்பதனால்….
பொய்யர்களே என்னைவிட்டு ஓடுங்கள்!
என்நண்பர் பகைவர் யார்?
நீரே தீர்மானியுங்கள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.