உயிர் வாடுது….

ஒன்றாயே அனைவர்க்கும் விடிகின்றது -ஏனோ
ஒருவர்க்கு ஒருதுன்பம் படிகின்றது.
நன்றாக வரும் என்று மனம் நம்புது -ஆனால்
நரகம் தான் பலநேரம் நமை வீழ்த்துது.
கன்றாக மனம் துள்ளிப் பலநாளது -ஆச்சு.
கவலைகள் விடைகொள்ளத் தயங்கின்றது.
மன்றாடிக் கணம் நெஞ்சும் அழுகின்றது -யாரும்
வரந்தந்து அணைக்காது உயிர் வாடுது!

யார் மேய்ப்பர், யார் மீட்பர் அறியாமலே -யாரு
யமன், தெய்வம் எனக்கண்டு தெளியாமலே
வேர் நொந்து உதிர்கின்ற துணராமலே -ஆடும்
விழுதெல்லாம் உயிர் வாடல் படியாமலே
தீர்வென்ன வருமென்றும் புரியாமலே -எட்டுத்
திசை திக்கும் தெருவோரம் தவஞ்செய்யுமே!
ஊர் மீள வழிசொல்லத் தெரியாமலே -தோற்கும்
உயர் கல்வி…எதிர்காலம் இருள் சூழுதே!

எவருக்கு எதுபற்றிப் பொறுப்புள்ளது? -மக்கள்
இழிந்தோட…எவர் வென்று உயர்கின்றது?
தவிக்கின்ற முயல் கொல்லும் குணம் ஆளுது -இலாபத்
தருணத்திற் கெவர் நெஞ்சும் வலைவீசுது.
புவியேற்றும் அறம் பற்றிப் புகழ்கின்றது -தர்மம்
புரிந்தும் தம் நலத்துக்கூர் அலைகின்றது.
சவமாகிடினும் ஏங்கி மனம் வாடுது -தோன்றும்
சபலத்தில் வரலாறும் நலிகின்றது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.