தருவாயா நல்லருள்?

குன்றா அழகில் கொலுவீற்று;
எங்களுக்கு
என்றும் உயிர்மூச்சாய் இருந்து;
பிறருக்கு
முன்னுதா ரணமாய் முகிழ்ந்து;
உலகிற்கெம்
மண்ணின் மகிமை உரைத்து;
உயிர்ப்பை வாழவைக்கும்
நல்லூரா…
எங்கள் நலிவு, மேன்மைக் கருள்பொழியும்
வல்ல பரம்பொருளே…
நின் வருடப் பெருவிழா
இந்த முறை ஏதும் வில்லங்கம்
இல்லாமல்,
‘முந்தியைப்போல்’…இடைஞ்சல் முறைக்காமல்,
முழு அளவில்
நடக்க அருள் நல்கு!
நாம் எல்லாம் சென்றமுறை
துடக்கில் ஒதுங்கியோர்போல் தொட, அணுக முடியாமல்
எட்டவே நின்று இருந்தெழுந்து
‘உயிர்க்குமிழுள்’
மட்டுப்பா டோடு மலர்ந்த விழா தனை ‘நேர்
அலையினிலே’ பார்த்தோம்.
“வெளி அடியார் இல்லாதும்
விழா நடக்கும் தடையின்றி” என்று
வியக்கவைத்தாய்!
தொற்றின் றனேகம் தொலைந்து
சிறிது எங்கோ
பற்றுகின்ற போதும்
பழையகாலம் போல் உன்னை
எந்தத் தடையுமற்று,
இடைவெளி எச்சரிக்கை விட்டு,
வந்து,
அழுதுன்றன் வாசலிலே பழிகிடந்து,
தங்கு தடையிலாது,
சன சமுத்திரம் நடுவே…
சங்கையொடு தம்பதி சமேதராய் நீ
வரும் அழகைக்
கண்டு, குளிர்ந்து,கசிந்து, மனம் கரைந்து,
கண்மல்கிப் பூத்து,
கவிதை இசை புராணம்
என்றெம் கலைகள் இரசித்து,
பிரசாதம்
அன்னதானம் உண்டு,
பிரதட்டை அடி அளிப்பு
தீச்சட்டி தூக்குக் காவடிகள்
எடுத்து, நேர்ந்த
நேர்த்தியெல்லாம் தீர்த்து,
நின் அருளைப் பெற்றுய்து,
ஆகக் களியாட்டம்
இலாது,
மீண்டும் அன்புறவு
கூடிக் குவிந்து, குதூகலித்து,
மகிழ்வதற்கு
ஆவலுடன் காத்துள்ளோம்!
ஆனால்…தொடர் இடரால்
பொருளா தாரத்தின் வீழ்ச்சி
புரட்டியெமைத்
தெருவில் வரிசைகளில் தேங்கும்
வெள்ளமாக்கிவிட
உருக்குலைந்தோம்!
‘மாற்றம்’ ஒன்று உருவானபின்பும்
எரிபொருள் அட்டைக்கும்,
“எங்கடிப்ப” தென்பதற்கும்,
‘QR cord’ எடுத்தும் கியூக்களிலே நிற்பதற்கும்,
உயிர் பொருள் ஆவியும் ஒடிய
அலைகின்றோம்!

இந்த நிலையிற்தான்
எமை ஆளும் நல்லூரா
உந்தன் திருவிழா தொடங்க உளது!
உன்
கொடியேறி ‘இருபத்து ஐந்து’ நாட்கள்
நின் அருளால்
புடம் போடப் படவுளது…
‘பொருளிழந்த’ எமது நிலம்!
வாகனங்கள், மஞ்சம், கைலாச வாகனம், செம்
பூச்சப்பறம்,
தங்க இரதம், சப்பறம், நிமிர்ந்த
தேர், இவற்றில் வந்து
திரண்ட தீமை, வினை அரைத்து
தீர்த்தத்தில் அட்ட திசை திக்கும்
குளிரவைத்து
மீண்டும் ஒருமிடுக்கை விரைவில்
எம் ஊர் உடுக்க..,
காலிக் ‘கஜானா’ நிரம்ப..,
கடன் தொலைய…
‘டொலரில்லை’ என்ற துயர் வடிய..,
பட்டினியும்
இ(ல்)லை வரிசை என்ற எதார்த்தமும்
திரும்பிவர..,
விலைகுறைய..,
பஞ்சம் விலகிவிட..,
குனிந்திருக்கும்
தலைநிமிர..,
யாரிடமும் தங்கிவாழா நிலைதிரும்ப..,
எடுப்பார் கைப் பிள்ளைகளாய் இருக்கும்
பழி சாக..,
தொடர் பிணிகள் ஓட..,
சுகம் மீள..,
நாட்டுக்கு
வரமருள வேண்டுமென்றுன்
வாசலிலே காத்துள்ளோம்!
திருவிழா நாளில் தினமும் எமைத்
தேடி வந்து
தருவாயா அருள்? நாமும்
வழக்கம்போல் தவித்துள்ளோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.