நெஞ்சிலே மகிழ்வு பொங்க,
நினைவு பின் சென்று கொஞ்ச,
தஞ்சமென் றன்று ஆசான்
தாழிலென் கவிதை ஆசைப்
பஞ்சினை வைத்தேன்…தீயைப்
பற்றிடச் செய்த…’ச.வே
பஞ்சரைப்’ பிறந்த நாளில்
பணிவொடு வாழ்த்து கின்றேன்!
என்கவி தவழ…தூக்கி
எழுந்தோட வைத்த ‘தாயன்’.
தன் சந்தச் சிந்தால் ஊரின்
சபைகளைக் கவர்ந்த மாயன்.
அன்று போர்ப் பாட்டுப் பாடி
அரசியல்க் கிடித்த தீரன்.
தன்பணி தமிழுக் கென்று
தளைத்த…’யாழ் இந்து வீரன்’
கவியரங்கென்றால் ‘ச.வே
ப’ சொல்லும் கவியைச் சிந்தை
செவிகளால் இரசிக்கக் கூட்டம்
திரண்டிடும்! சமூகம், போரின்
அவலத்தை அவரின் பாக்கள்
அரைத்துமே பழிக்கும்…ஐயன்
கவிதைகள் தமிழில் காலம்
கடந்துமே வாழும்! ஆளும்!!
ஆம்…’வடமராட்சித் தாலிக்
கொடி’ பற்றி உரைத்த சிந்து
ஊரெல்லாம் உலவிற் றன்று!
ஒளிரும் சொல் இன்றும் கொண்டு
வாழ்கிறார் ‘பெயர்ந்து’! அங்கும்
மகத்துவம் பரப்பி வென்று!
வாழ்த்துவேன்…”இன்னும் நீடு
வாழிய உயர்க” என்று!