வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில்
கனவில் மனதில் தருவோனே.
கருணை பொழியும் விழியின் வழியில்
கருமம் நிகழ அருள்வோனே.
புவியில் எனது பொருளும் பொலிய
புதுமை நிதமும் சொரிவோனே.
புதிர்கள் அவிழும் பொழுது புலர
புரிக கருணை பெருமானே!

துணைவர் இருவர் தொடர நிதமும்
துரித கதியில் வரவேணும்.
துயரை எதிர்கொள் துணிவும் பலமும்
துணையும் கணமும் தரவேணும்.
பணமும் புகழும் பணிவும் நிமிர்வும்
பரிசும் தரவும் வரம் வேணும்.
பனியில் மழையில் வெயிலில் எமக்குப்
பரனுன் பத பொன் நிழல்வேணும்.

உயிரில் மலரும் உணர்வு மலரை
உனது கழலில் சொரிகின்றேன்.
ஒளியும் மருளும் உனது சுடரில்
உருகி…அருளைப் பெறுகின்றேன்.
மயிரை அனைய ஒருவன்; நினது
மடியில் புனிதம் அடைகின்றேன்.
மனித நிலையை உதறி; ஒளிரும்
வடிவை அணுக முயல்கின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.