சக்தியர் போற்றுதும்!

உலகாளும் சக்தி! உவமையிலாத் தாய்நீ!
பலத்தோடே கல்வி பணமும் -தலைமுறைக்கு
நல்கும் அரசி! நவராத்ரீ நாளில்
தொல்லை துடை; தா துணை.

சக்தி இலையேல் சடம்இயங்க வாய்ப்பில்லை.
எக்கணமும் எங்கும் இயக்கமில்லை. -முக்தியில்லை.
மோட்சமில்லை. அண்டத்தின் மூலப் பரம்பொருளை
ஆட்டுவது அந்த அருள்.

அன்னை உருவாய், அகப்புற வாழ்வுதனை
முன்னேற்ற மூன்று முழுவடிவாய் -நின்று
வரமருளும் மங்கையர்க்கு மூன்றுமூன்று நாட்கள்
உரைக்கின்றோம் நன்றி உவந்து.

பிரமனின் நாவுறைவாள் பெண்ணாம் கலைத்தாய்.
கிருஷ்ணன் உளம்கொள் திருத்தாய் -அரன்சிவனின்
பாதி உடல் கொண்ட பார்வதித்தாய். சொல்..பொருளின்
நீதிவழி செல்வோம் நினைந்து.

அவல், சுண்டல், பொங்கல்,அருங்கனிகள், தந்தோம்.
கவிதைகள், பாட்டு, கலைகள், -எவைஎவற்றை
நின்று இரசிப்பாரோ நீட்டுகிறோம்; உள்ளுருகி
அன்னை யரைக்கேட்போம் அன்பு.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.