சரி தவறு?

தொடுவானம் தாண்டித் தொடர்ந்து விரிந்திருக்கு
கடல்;
சேற்று நாற்றம் கமழ் கரையில்…நின்றபடி
பார்த்தேன்;
அலைகளின் படையெடுப்பு…
‘போர் முடிந்து’
யாவரும் களைத்த இந்த
நாட்களிலும் தொடர…
போராட்ட வாழ்வின் புதிரவிழ்க்க முடியாமல்
கட்டு மரங்களில்
காற்றோடும் அலைகளொடும்
முட்டிமோதி… ‘பழையபடி’
துடுப்பு – கையால் வலிக்கின்றார்
‘எரிபொருள் கிடைக்காது’
இளைத்த இன்றை மீனவர்கள்!
கொக்குகளும் பருந்துகளும்
கடற்காகம் வல்லூறும்
தத்தமது வேலைகளில் மூழ்கி இரைதேட…
இன்று உயிரைவிட உள்ள,
விதி தீர்த்த,
‘குஞ்சு குருமானும்’ பெரிய பல மீன்களும்
தம்வாழ்வு விரைவில்
தகரவுள்ள தறியாது
தங்கள் பசிதணிக்கும் முயற்சியிலே
தவித்து நீந்த…
“யார்பக்கம் நியாயம்?
யார்பக்கம் அறம் தர்மம்?
யாரிடம் தவறு?
யார் செய்வ தநியாயம்?”
தீர்ப்புரைக்க முடியாத சிக்கல் குழப்பத்தில்
கையா லாகாத் தனத்தோடு
இக்கவியை
நெய்கிறது என் சொற்கள்.
நிஜம் உயிரை எடுக்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.