காத்திருப்பு

“மீட்பர் பலபேர் விரைந்து வருவார்கள்.
காலத்தை மாற்றுகிற களவீரர்
படைவரிசை
புடைசூழ எழுவார்கள்.
பொழுதை நிஜமாக
விடியவைக்கும் யுகபுருஷர்
வென்று திரும்புவார்கள்.
சகுனிகளின் சதி தகர்த்து
சாணக்கியத் தாலே
புகழையெல்லாம் மீட்கும் பொதுத்தலைவர்
புரவிகளில்
ஆரோகணித் தெங்கள்
அயலெங்கும் நிற்பார்கள்.
தேவர்கள்,
அந்தந்தத் தேவர்களின் தூதர்கள்,
ஆயிரம் ஆயிரமாய்
ஆசி வழங்குதற்கு
நேரெதிரே சேர்வார்கள்.
நேர்த்திவைத்துக் கடுந்தவங்கள்
இருந்தழைக்க எம்முன் இறைவர்கள்
மனமிரங்கி
வரமள்ளித் தருவார்கள்.
‘எல்லோரும்’ நம்வாழ்வை
உயர்த்த முயல்வார்கள்!
உண்மைகளை மீட்பார்கள்!
உயிர்களுக்கு நிம்மதியும்
அமைதியும் உவப்பார்கள்!”

என்றபடி காத்துள்ளோம்
இந்தக் கணம்மட்டும்!
ஒன்றும் நடக்கவில்லை
ஊரில், வாழ்வில் மாற்றமெதும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.