மந்திர என் கவி

வானமும் வையகமும் -என்றும்
வாழ்த்தும் படி வரம் கேட்டிடுவேன்.
ஞானத்தின் பேரொளியில் – தோய்ந்து
நாளையை ஆளும் முறைதெரிவேன்.
ஈனங்கள் போக்குதற்கு -இன்றும்
என் செய்ய வேண்டுமென்றே முயல்வேன்.
ஊனுயிர் நிம்மதியாய் – என்றும்
ஒளிர…பிணி, பகை போக்க நிற்பேன்!

வாழும் சில நாளில் -இந்த
வாழ்வொரு அர்த்தம் தரும்படியாய்
நாளைக்கும் இவ்வுலகம் – எண்ணி
நன்மைகள் என்னிற் பெறும் வகையாய்
வீழ்ந்தாலும் வாழுகிற -சொற்கள்
வெல்லும் படி ஓங்கி நிற்பதுவாய்
ஆழக் கவிகள் செய்து -என்றும்
ஆளும் தமிழுக் குதவிடுவேன்!

எந்தன் கவிதைகளால் -தமிழ்
ஏற்றமுறும் சனம் மேன்மையுறும்
எந்தன் கனவுகளால் -பூமி
இன்னும் நனவினில் நன்மை பெறும்
எந்தன் அடிச் சுவட்டில் -வையம்
ஈற்றில் அறம் தர்மத்தை உணரும்
மந்திர என் கவிதை -மக்கள்
வாழ்வுக் கொளிதரும்; வாழவைக்கும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.