ஏன் தான் நிமிரலை இன்னும்?

துன்பம் எனும் கடல் ஏறிக் கடந்திட
தோணி கிடைத்திட வில்லை- அட
துடுப்பும் அகப்பட வில்லை -கடற்
தண்ணியைத் தாண்டிட நீச்சல் தெரியலை
தாங்கி முக்குளிக்குமெம் எல்லை – தாண்டின்
தாழ்வோம்…எதும் மீட்சியில்லை!

எங்களை மட்டுமேன் துன்பம் தொடருது
எம்மோடேன் நொட்டுது நாளும் – எமக்கு
ஏன் நிதம் குட்டுது காலம் – மனம்
இங்கு நம் வாழ்க்கையில் இன்பத்தைக் காணவே
ஏங்கும்; இடர் மட்டும் சூழும் -இந்த
எதார்த்தத்தில்… வாழ்வதே பாவம்.

என்ன பழி, பிழை, யாருக்குச் செய்தோமோ
எவரெவர் சாபம் பெற்றோமோ? -முன்பு
எவர் வயிற்றில் அடித்தோமோ -எங்கள்
முன்னோர் புரிந்த வினையோ? வரலாற்றை
முறைத்துமே ஏய்த்த தவறோ? -பரி
காரங்கள் இல்லாக் குறையோ?

ஒன்றாகக் கூடி இருந்த சரித்திரம்
ஒருநாளும் இல்லாத சாதி -இது
உதிர்ந்தது தனக்குள் தான் மோதி -பிறன்
நன்று செய்தாலோ தடுக்கும்…தனித்துத்தன்
நன்மை பெற எழும் தேடி – சுய
நலத்தால் விழும்… தினம் வாடி.

எத்தனை தெய்வத்தை ஆதரித்தோம்…அவை
ஏன் வழி காட்டாமல் இங்கே – எமை
ஏய்த்தன…ஊதின சங்கே -“நாமே
உத்தமரா” என எங்களை நாம் கேட்டு
உளக்குணம் மாற்றுவோம் இன்றே -இல்லை
ஒருநாளும் வாழோம் யாம் நன்றே!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.