புதிர்கள் அவிழ் நீ!

வாழும் வழிகாட் டிடுவாய் முருகா!
மாய வினைகள் தனில் தீ யிடுவாய்.
ஆளும் மனமும், அறம் சேர் கவியும்,
ஆரா அமுதே அருள்வாய். தருவாய்!

போதை தெளியாப் பொது வாழ்க் கையிலே,
பாதை தெரியாப் பயணத் திசையில்,
மோதித் துயரில் முடியும் முனம், நின்
வீதி மணலில் உருண்டுய் திட வை!

சூரர் வெளியே இலை; உள் உறையும்
சூரத் தனமோ கணமும் பெருகும்.
“யார் என்னைவிட” எனவும் திமிறும்.
யாவும் படவே வடிவேல் விடணும்!

நோயும் பிணியும் நுழையும் உடலில்
நூறாய்க் கவலை விளையும் மனதில்
“காயம் இது பொய்” கருதும் கவியில்
காவல் எனநில் பகலில் இரவில்.

மோதிப் பணிவித் திடவே முயலும்
மோகம், புகழ் ஆசையினைத் தடடா!
பாதி வழி தாண்டிய என் பருவ
பாவச் செயல்கள் பலியாக் கிடடா!

நீளும் துயர வெயிலின் அனலில்
நீறும் நிலம்; நீ மழையாய் உடன் வா!
சூழும் முறுகல் சமயங் களிடை…
சொல்லுன் தருமம்…புரியா தவர்க்கே!

தீமைக் கொருதீ யெனவே எழுவேன்.
தேடித் தொடும் அன்புகள் பின் பணிவேன்.
போலித் தனம் முன் குனியேன்…நிமிர்வேன்.
பொய்யில் கவிழேன்…புதிர்கள் அவிழ் நீ!

யார்க்கும் இடர் செய் திடவுந் தயங்கி,
யார்க்கும் அடங்கா மனதோ டிரங்கி,
ஊரின் பல தேவை களுக் குதவி,
ஓடும் அருவி…இவனுன் கருவி!

வானம் வரையும் வளரும் அறிவும்,
வண்ணம் இளமை வடியா வடிவும்,
ஞானம் பெற நற் தகுதி யதுவும்,
நாளும் தருவாய் திரு ‘நல் லையனே’!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.