வரலாற்றின் வலி

ஒருவிடியற் போதில் உனது அஸ்த்தமனம்
பெருகிய குருதியால்…
நீ பெரிதாய் நினைத்திருந்த
நிலத்திலும் நீ, நெஞ்சார நேசித்த புற்களிலும்,
எழுதப்பட லாயிற்று!
உன்இறுதி மூச்சுகளை
வரமாக வாங்க வந்திருந்த தேவதைகள்
உருக்குலைந்த உனைப்பார்க்கச் சகிக்காமல்
ஓடிவிட
உன்மூச்சடைத்த உன்உருவ பலூன்பொம்மை
ஒன்றை உருவாக்கி
உலகைஏய்த்து விற்கவந்த
சாத்தான்கள்…சிதைந்தநின் சடலத்தை
இரசித்தபடி
மீட்டுந்தன் இறுதிமூச்சை
குடுவையொன்றில் அடைத்தகன்றார்!
உனது தசையை,
உனது எலும்புகளை,
உனது உறைந்தகட்டி இரத்தத்தை,
நகம்,மயிரை,
பங்குபோடக் காத்திருந்த…
உன்னோடு பாசமென
அன்றுசொன்ன நரிகள் இட்டஊளை எண்திசையும்
ஸ்தம்பித்துப் போக
ஆழிப்பேரலை போல
பொங்கியுன் பக்தர்களை புதைத்துச் சமாதியாக்க
நாய்களும் கழுதைப் புலிகளும்
ஓநாய்களுமே
கூடித் திரண்டு உனைக்குதற…எதுவுமே
மிஞ்சாத சூனியமாய் ஆனாய்
இறுதிஅஸ்தி
கரைக்கவும் ஏதுமின்றிக் காணாமலே போனாய்!
ஒருவிடியற் போதில் உனது அஸ்த்தமனம்
பெருகிய குருதியால்…
நீ பெரிதாய் மதித்தணைத்த
நிலத்திலும்…நெஞ்சார நேசித்த புற்களிலும்
எழுதப் படலாயிற்றே…
வரலாற்றின் பலியானாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply