உயர்வு

பருந்தொன்றின் பார்வை பரவி எண் திசைகளையும்
ஒருகுடைக்கீழ் கொண்டுவரும்.!
ஒருவட்டம் அடித்துவந்தால்
கீழே இருக்கும் அனைத்தும் தெரிந்துவிடும்.
ஆம்….உயரே உயரே
அதுபறந்து மேலெழும்ப
காணும் பரப்பின் கனம்அதிக மாகிவிடும்.
நாமுயர உயர
நம்பார்வைப் பரப்பதுவும்
கூடிவிட வேண்டும்:
நம்உயரம் என்பது
உடலளவால் அல்ல…உளஅளவால் கூடவேண்டும்.
சடமாய்க் கிடந்து…
ஓரறிவு ஈரறிவு
ஐந்தாறு அறிவுபெற்று…அதைத்தாண்டி உள்ளத்தால்
உயர உயர
அறிவு ஞானமாய் விரிய
ஒற்றைப் பரிமாணம் உடைந்து
இரண்டு மூன்றாகி
முற்றாய் ஒருஉயர வியாபகம் விண் அளவாகும்.
பல்பரிமாண நோக்கும்
உலகம் முழுவதுமே
எல்லைகள் அற்ற ஒன்றென்ற சிந்தனையும்
கூடிவரும் அப்போது!
குந்தி நிலத்திற்தான்
நீயே இருந்தாலும்…நின் உயரம் பூமியெனும்
பந்தைவிட்டு வெகுதொலைவில்
இருக்கும் விண்மீனாகும்!
அந்த உயர்வில்…
உலகும் இந்த மானுடமும்
ஒன்றுஎன்னும் படி..உலகப் பொதுமறையாய்
நீயுரைக்கும்
உன்வார்த்தை ஒவ்வொன்றும்
உச்சரிக்கப் பட்டுவிடம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply